
முத்துப்பேட்டை: கோபாலசமுத்திரம் அய்யனார் கோயில் அருகே சேதமாகிய குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் ஊராட்சி கோபாலசமுத்திரம் அய்யனார் கோயில் அருகே அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக சுமார் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இதன் மூலம் தினமும் குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது. இதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த குடிநீர் டேங்க் தற்போது பயனில் இருந்தாலும், அதன் தாங்கு பில்லர்கள் மற்றும் சிமெண்ட் பெல்ட் இணைப்புகளில் சிமெண்ட் காரை பெயர்ந்து உதிர்ந்துள்ளன. உள்ளிருக்கும் இரும்பு கம்பிகளும் துருபிடித்து காணப்படுகிறது. இதனால் டேங்கின் ஸ்திரதன்மை கேள்வி குறியாகி பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதுடன், எந்தநேரத்திலும் பல பகுதி இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் இந்த குடிநீர் டேங்க் கீழ்ப்புறம் அமர்ந்து ஓய்வு எடுப்பதுடன், சிறுவர்கள் விளையாடும் ஒரு பகுதியாகவும் உள்ளது. அதனால், இந்த குடிநீர் டேங்க் பகுதிகள் இடிந்து விழும் நிலையில் உயிர் பலியாகவும் வாய்ப்புகள் உள்ளது.
எனவே, அப்பகுதி மக்கள் பொலிவு இழந்த இந்த குடிநீர் டேங்கை சீரமைத்து தர வேண்டும் அல்லது இடித்து அகறறிவிட்டு புதிய குடிநீர் டேங்க் அமைத்து தரவேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் 10 ஆண்டு ஆட்சியில் இருந்த அதிமுக அரசு அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்ள வில்லை. இதனால் நாளுக்கு நாள் இந்த குடிநீர் டேங்க் பொலிவு இழந்து ஆபத்தான நிலைக்கு மாறி வருகிறது. இதனால் இனியும் காலதாமதம் படுத்தாமல் ஒன்றிய நிர்வாகம் அல்லது மாவட்ட கலெக்டர் துரித நடவடிக்கை எடுத்து இந்த குடிநீர் டேங்கை சீரமைத்து தர வேண்டும் அல்லது அகற்றி விட்டு இப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் உடன் புதிய குடிநீர் டேங்க் அமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கோபாலசமுத்திரம் அய்யனார் கோயில் அருகே சேதமாகிய குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.