×

மழைநீரால் நெற்பயிர் சேதம் விடுபட்டோர் வங்கி கணக்கில் காப்பீட்டுத் தொகை வரவு

 

கொள்ளிடம்: கடந்த பருவ மழையின்போது மழைநீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களுக்கு விடுபட்ட விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு காப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த பருவம் மழையின்போது நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்த காப்பீட்டுத் தொகை சிலரின் வங்கி கணக்குகளில் மட்டுமே வரவு வைக்கப்பட்டிருந்தன. மீதமுள்ள 50 சதவீதத்துக்கு மேல் காப்பீடு பிரிமியம் செலுத்தியிருந்த விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வராமல் இருந்தது.

இதுகுறித்து விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த திங்கள் அன்று நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட அளவிலான விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விடுபட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்க கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நடவடிக்கை எடுத்ததன் காரணமாக நேற்று முன்தினம் முதல் விடுபட்ட விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு காப்பீட்டு தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் கூறுகையில்,

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விடுபட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வராததால் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் நேரில் முறையிட்டோம். கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் காரணமாக விடுபட்ட விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேற்று முன்தினம் முதல் காப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் விடுபட்ட அனைத்து விவசாயிகளின் வங்கி கணக்குகளிலும் படிப்படியாக காப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்படும். விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டருக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.

The post மழைநீரால் நெற்பயிர் சேதம் விடுபட்டோர் வங்கி கணக்கில் காப்பீட்டுத் தொகை வரவு appeared first on Dinakaran.

Tags : Kollidham ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் குறுவை சாகுபடி பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்