×

கட்சி அரசியலை கடந்து பெருமதிப்பு பெற்றவர் செழியன் என்று விஐடியில் இரா.செழியன் நூற்றாண்டு விழா: பழ.நெடுமாறன் பேச்சு

 

வேலூர்: கட்சி அரசியலை கடந்து பெருமதிப்பு பெற்றவர் செழியன் என்று வேலூர் விஐடியில் நடந்த இரா.செழியன் நூற்றாண்டு விழாவில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பேசினார்.வேலூர் விஐடி பல்கலைக்கழகம், நாவலர்-செழியன் அறக்கட்டளை இணைந்து நடத்திய இரா.செழியன் நூற்றாண்டு விழா விஐடியில் நேற்று நடந்தது. நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விஐடி அண்ணா அரங்கில் புகைப்பட கண்காட்சியை தமிழக முன்னாள் அமைச்சர் நல்லுசாமி திறந்து வைத்தார்.

தொடர்ந்து நேற்று நடந்த இரா.செழியன் நூற்றாண்டு விழாவுக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது: காலம் கடந்தாலும் நாவலரையும், செழியனையும் மறக்க முடியாது. 1985ம் ஆண்டு விஐடிக்கு அடிக்கல் நாட்டியதே நாவலர் தான். இது வளர்ந்து தற்போது இங்கு கிட்டத்தட்ட 40 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். 4 கேம்பஸிலும் 80 ஆயிரம் பேர் படிக்கிறார்கள். இந்த பெருமையெல்லாம் எம்ஜிஆரை சேரும். நாவலருடன் 40 ஆண்டு, செழியனுடன் 50 ஆண்டு என்று பழகிய வாய்ப்பு எனக்கு இருந்தது. இருவரையும் நினைக்கும்போது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆற்காடு சகோதரர்கள் ஏ.ராமசாமி, ஏ.லட்சுமணசாமி போன்ற புகழை பெற்றவர்கள் நாவலர் சகோதரர்கள்.

2011ல் இங்கு வந்த செழியன், மறையும் வரை இங்குதான் இருந்தார். அரசியலில் நேர்மையையும், தூய்மையையும் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார். மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் பணியாற்றினார். அப்போது அவரை ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் மதித்ததை பார்க்கும்போது அவருக்கு நிகராக ஒரு எம்பி யாரும் இத்தனை ஆண்டுகளில் வந்ததில்லை. மக்களவையாகட்டும், மாநிலங்களவையாகட்டும், யாருடைய மனமும் நோகாமல் பேசுவார். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பேசியதாவது: நாவலர் நெடுஞ்செழியனின் எத்தனையோ சிறப்புகளை விட, சட்டமன்ற ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்துவதில் அவர் முன்னிலையில் நின்றார். அவையின் முன்னவராக, சட்டமன்ற மரபுகளில் இருந்து யாரும் விலகுவதை ஒருபோதும் அனுமதிப்பதில்ைல. அதன் மூலம் சட்டமன்ற ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்தினார்.

அதேபோல் அவரது இளவல் செழியனும் நாடாளுமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் அங்கம் வகித்தபோது நாடாளுமன்ற மரபுகளை நிலைநிறுத்துவதில் பாடுபட்டார். இங்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் எல்லோரும் கூடியிருந்து செழியனை நினைவுகூர்ந்து பாராட்டுவது என்றால், இவை அத்தனையும் கட்சி அரசியலை கடந்து அவர் எவ்வளவு பெரிய மதிப்பை பெற்றுள்ளார் என்பதை அறியலாம். மக்கள் தொண்டு என்று வரும்போது அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்ற உன்னதமான கோட்பாட்டை நாவலரும், அவரது இளவல் செழியனும் கடைபிடித்தார்கள். அமைச்சர் பதவி ஏற்றவர்கள் நாட்டுக்கும், மக்களுக்கும் அமைச்சர்கள் என்பது இல்லை. இந்த கட்சியை சேர்ந்த அமைச்சர் என்றுதான் சொல்லுகிறார்கள் என்று ஒருமுறை செழியன் வேதனையாக சொன்னார்.

செழியன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய சிறப்புகளை இங்கு சொன்னார்கள். குறிப்பாக 1975ம் ஆண்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் சிறைபடுத்தப்படுகிறார்கள். ஆனால் அன்று செழியனையும் சிறை பிடிக்க வேண்டும் என்று பெருமுயற்சியை அரசு எடுத்தது. அதில் தப்பி எப்படியோ நாடாளுமன்றத்தில் புகுந்து ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்க உரையாகும். இதையெல்லாம் இன்றைய இளைஞர்கள் உணர இங்கு வெளியிடப்பட்ட புத்தகங்களை படிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், இந்திய கம்யூ. பொதுச் செயலாளர் டி.ராஜா, முன்னாள் எம்பி டி.கே.ரங்கராஜன், முன்னாள் அமைச்சர்கள் ஹண்டே, பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன் உட்பட அறக்கட்டளை உறுப்பினர்கள், நூற்றாண்டு விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.

The post கட்சி அரசியலை கடந்து பெருமதிப்பு பெற்றவர் செழியன் என்று விஐடியில் இரா.செழியன் நூற்றாண்டு விழா: பழ.நெடுமாறன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Ira. Sezhiyan Centenary Celebration ,VIT ,Psaha Nedumaran ,Chezhiyan ,Vellore ,Ira. Sezhiyan ,Centenary Celebration ,Pala ,. Nedumaran ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…