×

காஷ்மீரில் குடியேற வெளிமாநில மக்களுக்காக 336 மலிவு விலை வீடுகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ஜம்மு: பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின்கீழ், ஜம்மு காஷ்மீரில் குடியேற விரும்பும் வெளிமாநில மக்களுக்காக 336 வீடுகளை கட்ட ஜம்மு காஷ்மீர் வீட்டு வசதி வாரியம் முடிவெடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை நீக்கியது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு பல்வேறு முயற்சிகளை பாஜ அரசு செய்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக, ஜம்மு காஷ்மீரில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக குடியேற நினைப்பவர்களுக்காக வீடுகளை ஒதுக்க ஜம்மு காஷ்மீர் வீட்டு வசதி வாரியம் திட்டமிட்டுள்ளது.

கல்வி கற்பதற்காகவும், வேலை தேடியும், நீண்டகால சுற்றுலாவுக்காகவும் ஜம்மு காஷ்மீர் செல்லும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அல்லது குறைந்த வருமானம் உள்ள நபர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின்கீழ், வரும் மே மாதம் முதல் இந்த வீடுகள் ஒதுக்கப்படவுள்ளன. ஜம்முவின் புறநகர்ப்பகுதியான சுஞ்ச்வானில் ‘மலிவு விலையில் வாடகை வீடு வளாகங்கள்‘ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம், தெருவோர வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட உள்ளூர் அல்லாதவர்களுக்கும் குடியிருப்பதற்கான வசதியை ஏற்படுத்தி தருவதாகும்.

தினசரி அத்தியாவசிய தேவைகள், கல்வி, மருத்துவம், வணிகம் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்த குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. நிலநடுக்கத்தை தாங்க கூடிய அளவில் கட்டப்படும் இந்த குடியிருப்புகள் சமையலறை, படிக்கும் அறை, படுக்கையறை உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்புகளுடன் கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2,200 மாத வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த வீடுகளை பெற ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி மே 15 என்று ஜம்மு காஷ்மீர் வீட்டு வசதி வாரியம் தெரிவித்துள்ளது.

The post காஷ்மீரில் குடியேற வெளிமாநில மக்களுக்காக 336 மலிவு விலை வீடுகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Jammu ,
× RELATED பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு,...