×

காவல் நிலையம் முன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சிறை காவலர் உயிரிழப்பு: எஸ்ஐ சஸ்பெண்ட்

லால்குடி: காவல் நிலையம் முன் தீக்குளித்த சிறை காவலர் நேற்று காலை உயிரிழந்தார். இதுதொடர்பாக லால்குடி எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (45). லால்குடி கிளை சிறையில் முதல் நிலை காவலராக உள்ள இவருக்கும், அவரது தம்பி நிர்மலுக்கும் சொத்து பிரச்னையில் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதுதொடர்பாக இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் லால்குடி எஸ்ஐ பொற்செழியன்(52) வழக்கு பதிந்து விசாரித்து வந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ராஜா, நிர்மல் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதுபற்றி புகார் கொடுக்க வந்த ராஜா, லால்குடி காவல்நிலையம் முன்உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று காலை இறந்தார். இதையடுத்து புகாரை சரியாக விசாரிக்காத லால்குடி எஸ்ஐ பொற்செழியனை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் நேற்று உத்தரவிட்டார்.

The post காவல் நிலையம் முன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சிறை காவலர் உயிரிழப்பு: எஸ்ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : SI ,Lalkudi SI ,SI Suspend ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளம் அருகே மது விற்றவர் கைது