×

பொள்ளாச்சி வனச்சரகத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்னா யானை கிராமத்தில் நுழையாமல் தடுக்க 3 கும்கிகளுடன் கண்காணிப்பு: வனத்துறையினர் தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த, மக்னா யானை அங்குள்ள கிராமத்தில் புகாமல் தடுக்க, மூன்று கும்கிகள் மூலம் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி அருகே உள்ள கிராமங்களில், விவசாய நிலங்களை சேதப்படுத்தியதுடன், பொதுமக்களை அச்சுறுத்திய மக்னா காட்டுயானையை வனத்துறையினர் கடந்த சில மாதம் முன் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் வனத்தில் விட்டனர். ஆனால் அந்த மக்னா யானை, சில நாட்களிலேயே அங்கிருந்து வெளியேறி ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக கோவை குனியமுத்தூர் பகுதிக்கு சென்றது.

அங்கு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் வனத்துறையினர் கும்கிகள் உதவியுடன் யானையை பிடித்து வால்பாறை அருகே உள்ள மந்திரி மட்டம் பகுதியில் கொண்டு வந்து விடுவித்தனர். இதற்கிடையே அந்த மக்னா யானை, சுமார் ஒரு வாரத்துக்கு முன்பு அங்கிருந்து இடம்பெயர்ந்து சுமார் 36கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள டாப்சிலிப் வனத்திற்குள் புகுந்தது. அந்த யானை, டாப்சிலிப் வனத்தையொட்டிய பொள்ளாச்சி வனச்சரகத்திற்குள் வந்து, அங்குள்ள கிராமத்திற்குள் புக வாய்ப்புள்ளதாக அறிந்த வனத்துறையினர், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக, சுமார் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மூலம் கண்காணிக்கப்பட்டது. இந்நிலையில், மக்னா யானை பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட எல்லையில் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று முதல், வனச்சரகர் புகழேந்தி தலைமையில், சுமார் 60க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தனித்தனி குழுவாக சரளபதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட துவங்கினர். இதற்கிடையே, வனத்திலிருந்து யானை வெளியேறி அங்குள்ள கிராமத்திற்குள் நுழையாமல் தடுக்க, கோழிக்கமுத்தி முகாமிலிருந்து சின்னதம்பி, முத்து, ராஜவர்த்தனா ஆகிய மூன்று கும்கி யானைகள் சரளபதி பகுதிக்கு நேற்று வரவழைக்கப்பட்டது. இந்த கும்கிகள் மூலம், மக்னா யானை கிராமத்திற்குள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று கும்கி யானைகளையும் தனித்தனியாக குழுவாக பிரித்து, பகல், இரவு என 24 மணிநேரமும் பொள்ளாச்சி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி வனச்சரகத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்னா யானை கிராமத்தில் நுழையாமல் தடுக்க 3 கும்கிகளுடன் கண்காணிப்பு: வனத்துறையினர் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Pollachi Forest ,Pollachi ,Pollachi Wildlife ,Area ,Dinakaran ,
× RELATED காட்டு முயல் வேட்டையாடிய 10 பேர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்