
சென்னை: கடந்த 8 மாதங்களுக்கு மேலாக புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அஜித் பட தயாரிப்பாளரும், நடிகருமான எஸ்.எஸ்.சக்ரவர்த்தி மரணம் அடைந்தார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமாரின் ஆரம்பகால நெருங்கிய நண்பராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி. அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘ராசி’, ‘வாலி’, ‘முகவரி’, ‘சிட்டிசன்’, ‘ரெட்’, ‘வில்லன்’, ‘ஆஞ்சநேயா’, ‘ஜி’, ‘வரலாறு’ ஆகிய 9 படங்களை தயாரித்துள்ள அவர், பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான ‘காதல் சடுகுடு’, சிம்பு நடித்த ‘காளை’, ‘வாலு’ ஆகிய படங்களையும் தயாரித்தார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அஜித் குமாரும், எஸ்.எஸ்.சக்ரவர்த்தியும் பிரிந்தனர்.
கடந்தாண்டு விமல், இனியா நடிப்பில் வெளியான ’விலங்கு’ என்ற வெப்தொடரில், போலீஸ் அதிகாரியாக எஸ்.எஸ்.சக்ரவர்த்தி நடித்திருந்தார். அஜித் குமார் தமிழில் நடித்த சில படங்கள் படுதோல்வி அடைந்தன. இதனால், அவரை வைத்து படம் தயாரிக்க யாரும் முன்வரவில்லை. அப்போது துணிச்சலாக அஜித் குமாரை வைத்து ‘ராசி’ படத்தை எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரித்தார். தவிர, தனது மகன் ஜானி நடிப்பில் ‘ரேனிகுண்டா’, ‘18 வயசு’ ஆகிய படங்களை தயாரித்தார். சிம்பு நடிப்பில் ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை தயாரித்தார். அப்படத்தின் ஷூட்டிங் பொருளாதார பிரச்னை காரணமாக பாதியிலேயே நின்றுவிட்டது. சில காலம் படத் தயாரிப்பில் இருந்து விலகியிருந்த எஸ்.எஸ்.சக்ரவர்த்தி, சென்னை வடபழநியில் டப்பிங் ஸ்டுடியோ ஒன்றையும் நடத்தி வந்தார். பிறகு அந்த ஸ்டுடியோவை மூடிவிட்டார்.
8 மாதங்களாக புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் சென்னையில் மரணம் அடைந்தார். எஸ்.எஸ்.சக்ரவரத்தியின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
The post அஜித், சிம்பு, விக்ரம் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் புற்றுநோயால் மரணம் appeared first on Dinakaran.