×

சூறைக்காற்றால் முறிந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு தேவை 10 சிறுதானியங்களுக்கு ஆதார விலை அவசியம்-குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேண்டுகோள்

மதுரை : சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, 10 சிறுதானியங்களுக்கு ஆதார விலையை அரசு நிர்ணயிப்பதுடன், தற்போது வீசிய சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் வலியுறுத்தினர்.மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வேளாண் இணை இயக்குநர் விவேகானந்தன், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் குருமூர்த்தி, நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் முருகேசன் மற்றும் வேளாண்மைத்துறை தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: மாவட்டத்தில், கோடைகாலம் முடிந்து, தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தால், குறுவை நெல்நடவு தொடங்கிவிடும்.குறுவைக்கு எந்த நெல்லை சாகுபடி செய்ய வேண்டும். எந்த வகையிலான உர மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும் என வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், தற்போது நிலவும் விதை நெல் தட்டுப்பாட்டைப் போக்க, குறுவை நெல்விதையை போதிய அளவு இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். நடப்பாண்டினை சிறுதானிய ஆண்டாக அரசு அறிவித்தது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சிகரமானது. சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், குறைந்தபட்சம் 10 சிறுதானியங்களுக்காவது அரசு ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும்.

நஞ்சில்லா சாகுபடி என்ற ரசாயன உரப் பயன்பாடு இல்லாத நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், அனைத்துப் பகுதிகளிலும் வேளாண்மைத்துறை சார்பில் இலவசமாக மண் பரிசோதனை மேற்கொண்டு, மண்ணின் தரம் குறித்தும், அதனை மேம்படுத்த எவ்வகையான தழைச்சத்து, சாம்பல் சத்து உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் தெரியப்படுத்த வேண்டும்.

மாடக்குளம் கண்மாய்க்கு நிலையூர் கால்வாயில் இருந்து அச்சம்பத்து வழியாக வரத்துக்கால்வாய் உள்ளது. இதில், அச்சம்பத்து பகுதியில் தொடர்ந்து கழிவு நீர் கலக்கப்படுகிறது. குறைதீர் கூட்டத்தில் பல முறை கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது கால்வாயில் தண்ணீர் வராத காரணத்தால், துரித நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கலக்கும் பகுதிகளை அடைக்கலாம். இதில், பொதுப்பணித்துறை, ஊராட்சி நிர்வாகம் சேர்ந்து பணியாற்ற வேண்டும். கடந்த ஆண்டில் பருத்தியில் வேர் புழு தாக்குதலால், பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அந்த நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில், பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு விரைவாக இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சமீபத்தில் வீசிய சூறைக்காற்றால் பல ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இவற்றை கணக்கெடுத்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பெரியாறு – சிங்கம்புணரி கால்வாய் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்த கால்வாயை சீரமைக்க வேண்டும். இதன்மூலம் பெரியாறு தண்ணீர் நிர்ணயிக்கப்பட்ட பகுதி வரை சென்று, பாசனம் செய்ய முடியும். நிகழாண்டில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் பருத்தியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்னையில் தற்போது வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகளவில் பரவி வருகிறது. இதனால், தென்னை மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளின் 50 ஆண்டு கால உழைப்பும் வீணாகி, தென்னை மரங்கள் முழுமையாக அழியும் நிலையில் உள்ளது. இந்த ஈக்களை அழிக்க வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும், வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தேவையான ஒட்டுண்ணிகளை 100 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். விவசாய பகுதியில் ஒரு சிலர் கட்டிடம் கட்டுவதால், அருகில் உள்ள விவசாயி நெல் சாகுபடி நிலம் சதுரடியாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் மாற்றப்படுகிறது. இதனால், உண்மையான விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நடமுறையை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர்.

* மதுரை பேரையூரை சேர்ந்த சங்கிலிப்பாண்டி என்ற வேளாண் பட்டதாரி, டிரோன் மூலம் விவசாய பயிர்களுக்கு மருந்து அடிக்கவும், உரம் தெளிக்கும் பணிகளை செய்யவும் தயாராக இருப்பதாக கூறினார். அந்த பட்டதாரி வாலிபரை விவசாயிகள் பாராட்டினர்.

The post சூறைக்காற்றால் முறிந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு தேவை 10 சிறுதானியங்களுக்கு ஆதார விலை அவசியம்-குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Kuradir ,Madurai ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி