×

குடிநீர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் புதிய தாமிரபரணி குடிநீர் திட்ட பணி 90% நிறைவு-அருப்புக்கோட்டை நகர்மன்ற கூட்டத்தில் தகவல்

அருப்புக்கோட்டை : புதிய தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இந்த பணிகள் நிறைவடைந்தால் நகரில் முழுமையான தாமிரபரணி குடிநீர் ஒருநாள் விட்டு ஒருநாள் விநியோகம் செய்யப்படும் என அருப்புக்கோட்டை நகர்மன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.அருப்புக்கோட்டை நகர்மன்ற அவசர கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் அசோக்குமார், நகராட்சி பொறியாளர் ராமலிங்கம், மேலாளர் சங்கர் கணேஷ், துணைத்தலைவர் பழனிச்சாமி, முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

பாலசுப்பிரமணியம் (சிபிஎம்): மலையரசன் கோவில் பகுதியில் உள்ள கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் விருதுநகர் மெயின் ரோடு, உச்சி மாகாளியம்மன் கோவில் பின்புறம் உள்ள ஓடை முழுவதும் நகராட்சியினர் மற்றும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயகவிதா(திமுக): பழைய பேருந்துநிலைய பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பலமுறை வலியுறுத்தியும், நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த வளர்ச்சிமன்ற கூட்டத்தில் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

தனலட்சுமி(மதிமுக): புளியம்பட்டி சவுண்டு ராமலிங்கம் தெருவில் குப்பை கொட்ட அனுமதிக்கக்கூடாது. இதனால் சுகாதார கேடாக உள்ளது. மேலும் எங்களது பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வருபவர்கள் மழை வெயிலுக்கு சிரமப்படுகின்றனர். இதனால் எனது செலவில் பணம் செவழித்து பந்தல் அமைத்து கொடுத்துள்ளேன். புதிய ரேசன் கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனாட்சி(திமுக): எனது வார்டில் குடிநீர் உப்பும், சப்புமாக தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. நகராட்சி மூலம் வழங்கக்கூடிய குடிநீரில் உணவு சமைத்தால் மஞ்சள் கலராக உள்ளது. நல்ல தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.பழனிச்சாமி (துணைத்தலைவர்): தாமிரபரணி குழாய் உடைந்ததால் தண்ணீர் வரவில்லை. திருப்புவனம் வைகை தண்ணீரை வைத்து தான் கொடுக்க வேண்டி உள்ளது. தாமிரபரணி குடிநீரும், வைகை குடிநீரும் கலந்து கொடுக்கும்போது இந்த பிரச்சனை இல்லை. தாமிரபரணி தண்ணீர் வராததால் தான் இந்த நிலை. நல்ல தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கண்ணன் (திமுக): ரேசன் கடை கட்டிடம் திறக்கப்பட்டு 5 மாதமாகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. விரைவில் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமதிலகவதி(அதிமுக): பெரியதெருவில் மினிபவர் டேங்க் அமைத்து மின்இணைப்பு இல்லாமல் செயல்படாமல் உள்ளது. விரைவில் மின்இணைப்பு பெற்று செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பட்டாபிராமர் கோவில் தெருவில் உள்ள கழிப்பறை மிகவும் மோசமாக உள்ளது. விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இடிக்க உத்தரவிட வேண்டும்.
டூவிங்கிளின் ஞானபிரபா(திமுக): ரயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

அப்துல் ரகுமான்(திமுக): அருப்புக்கோட்டை நகர் முழுவதும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. காவல்துறை துணையோடு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
அசோக்குமார்(கமிஷனர்): நெடுஞ்சாலை, வருவாய்த்துறை, காவல்துறை ஆகியோருடன் இணைந்து விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

சிவப்பிரகாசம்(திமுக): நகராட்சி நிதிநிலையை பொருத்து நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. தற்போது தெருவிளக்குகள் 300க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் தேவையான தெருவிளக்குகள் அமைக்கப்படும். புதிய தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இந்த பணிகள் நிறைவடைந்தால் நகரில் முழுமையான தாமிரபரணி குடிநீர் ஒருநாள் விட்டு ஒருநாள் விநியோகம் செய்யப்படும். மேலும் பாதாளச்சாக்கடை திட்டமும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனால் நகரில் குடிநீர் பிரச்சனை தீரும். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post குடிநீர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் புதிய தாமிரபரணி குடிநீர் திட்ட பணி 90% நிறைவு-அருப்புக்கோட்டை நகர்மன்ற கூட்டத்தில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Arupurukkotta ,Arapukkota ,Arapukotta ,Dinakaran ,
× RELATED மகளிர் உரிமை தொகை பிரேமலதா பாராட்டு