×

கோரம் இல்லையென கோஷம்; தொடர் அமளியால் கூச்சல், குழப்பம் மாநகராட்சி கூட்டம் தொடங்கிய 15வது நிமிடத்தில் ரத்து

*தற்கொலை மிரட்டல் விடுத்த கவுன்சிலரால் பரபரப்பு

*நெல்லை வர்த்தக மையம் முன்பு பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும்.

*பேட்டை மதிதா இந்துக் கல்லூரிக்கு செல்லும் சாலைக்கு ஏஎல். சுப்பிரமணியன் சாலை என பெயர் சூட்டப்படும்.

*ரகுமத் நகரிலிருந்து சதக்கத்துல்லா கல்லூரிக்கு செல்லும் சாலைக்கு எம்ஏகே தயாப் ஐஏஎஸ் பெயர் சூட்டி தீர்மானம்

நெல்லை : நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் தொடர்பாக கவுன்சிலர்களின் தொடர் அமளியால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. கூட்டத்தில் தர்ணா மேற்கொண்ட 15வது வார்டு கவுன்சிலர், தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் மேயர் பிஎம் சரவணன் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் கே.ஆர். ராஜூ, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள் கதீஜா இக்லாம் பாசிலா, பிரான்சிஸ், மகேஸ்வரி, ரேவதி பிரபு மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் பி.எம். சரவணன் பேசுகையில், ‘‘தமிழினத்தின் எழுச்சிக்காக மொழிப் போராட்டத்திற்காக பாளை மத்திய சிறையில் ஓராண்டு காலம் முன்னாள் முதல்வர் கலைஞர் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். எல்லாரும் எல்லாம் பெற வேண்டும் என திராவிட தத்துவத்தை நிலைநாட்டிய கலைஞரின் நூற்றாண்டு விழா நடந்து வருகிறது. சமூக நீதிக்காக போராடிய அவரது பேனாவுக்கு மதிப்பளிக்கும் வகையில் நெல்லை வர்த்தக மையம் முன்பு பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும்.

நெல்லை ஈரடுக்கு மேம்பாலம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் உள்ளிட்ட திட்டங்களை தந்த முன்னாள் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியத்தை பெருமைப்படுத்தும் வகையில் பேட்டை மதிதா இந்துக் கல்லூரிக்கு செல்லும் சாலைக்கு ஏஎல். சுப்பிரமணியன் சாலை என பெயர் சூட்டப்படும். ரகுமத் நகரிலிருந்து சதக்கத்துல்லா கல்லூரிக்கு செல்லும் சாலைக்கு எம்ஏகே தயாப் ஐஏஎஸ் பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.’’ என்றார்.

5வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன் (திமுக): ரகுமத் நகர் தூத்துக்குடி சாலையில் இருந்து சதக்கத்துல்லா அப்பா கல்லூரி செல்லும் சாலைக்கு தயாப் பெயரை வைப்பதற்கு பரிந்துரைத்த பாளை தொகுதி எம்எல்ஏ அப்துல்வகாப், மேயர் பிஎம் சரவணன், துணை மேயர் ராஜூ, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு வார்டு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகநாதன் (திமுக): சென்னையில் பல்நோக்கு மருத்துவமனைக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டதற்கும், மதுரையில் கலைஞர் நூலகம் திறக்கப்படுவதற்கும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். (இக் கோரிக்கை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது).

(தொடர்ந்து திமுக கவுன்சிலர் கிட்டு மாநகராட்சி கூட்டம் நடத்த கோரம் இல்லை என்று கூறி வாக்குவாதத்தை தொடங்கி வைத்தார். இதனால் கவுன்சிலர்கள் கோரம் இல்லை என்று கூறி கோஷமிட்டனர். மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கையெழுத்திட்டிருப்பதாகக் கூறி ‘மினிட்’ புத்தகத்தை காட்டி விளக்கினார்.)
இதையடுத்து துணை மேயர் கே.ஆர்.ராஜூ பேசுகையில், ‘‘அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவந்து பொதுமக்கள் தாகம் தீர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித் துறை அமைச்சர், எம்எல்ஏ அப்துல்வகாப் ஆகியோருக்கு நன்றி. 4 ரத வீதிகளிலும் தேரோட்டத்திற்கு வசதியாக புதை மின் தடம் பதித்ததற்கும், மாநகராட்சியில் சிறப்பாக திட்டங்களை தந்து கொண்டிருக்கும் முதல்வர், மின்சாரத்துறை அமைச்சர், எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

(துணை மேயர் பேசிக் கொண்டிருக்கும் போதே, கவுன்சிலர்கள் கிட்டு, மன்சூர், ரவீந்தர் உள்ளிட்ட டவுன் மண்டல கவுன்சிலர்கள் கூச்சல் எழுப்பிக் கொண்டே மேயர், கமிஷனர் இருக்கை அருகே வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் பவுல்ராஜ், சுந்தர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கோஷமிட்டனர். தீர்மானங்களை ஒத்திவைக்கக் கோரியும், தீர்மானங்களை வாசித்து விவாதம் நடத்தக் கோரியும் கவுன்சிலர்கள் இரு பிரிவுகளாக மோதியதோடு, அமளியிலும் ஈடுபட்டனர்.

இதனால் கூட்டத்தில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. கமிஷனர் அவரது இருக்கையில் இருந்து இறங்கி வந்து, இருதரப்பினருக்கும் நடுவில் நின்றுகொண்டு சமரசம் செய்து வைத்தார். இந்நிலையில் மேயர் கூட்டத்தை 10 நிமிடங்கள் ஒத்திவைப்பதாகக் கூறி விட்டு, இருக்கையிலிருந்து எழுந்து சென்றுவிட்டார். தொடர்ந்து சாதாரண மற்றும் அவசர கூட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சில கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர்.)

தொடர்ந்து 15வது வார்டு கவுன்சிலர் அஜய், திடீரென மேயர் இருக்கை முன்பு அமர்ந்து திடீர் தர்ணா மேற்கொண்டார். அவரை கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாட்சா ஆகியோர் சமரசப்படுத்த முயற்சித்தும், அவர் எழுந்து செல்ல மறுத்துவிட்டார். கவுன்சிலர் அஜய் கூறுகையில், ‘‘தாழ்த்தப்பட்டவர்கள் வார்டு என்பதால் எனது வார்டுக்கு குடிநீர் வாரத்தில் 3 தினங்கள் மறுக்கப்பட்டு வருகிறது. என்னை கட்சியிலிருந்து நீக்கினாலும் பரவாயில்லை. தொடர்ந்து என்னை சித்ரவதை செய்தால் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை.’’ என்றார்.

இதையடுத்து துணை மேயர், கமிஷனர் மற்றும் அதிகாரிகள் அவரை அங்கிருந்து சமாதானப்படுத்தி வெளியே அழைத்துச் சென்றனர். பின்னர் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் துணை மேயர் தலைமையில் கவுன்சிலர்கள் மினி கூட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்றனர்.

The post கோரம் இல்லையென கோஷம்; தொடர் அமளியால் கூச்சல், குழப்பம் மாநகராட்சி கூட்டம் தொடங்கிய 15வது நிமிடத்தில் ரத்து appeared first on Dinakaran.

Tags : Amali ,Paddy ,Trade Centre ,Hoot Madita ,
× RELATED செங்கல்பட்டு அருகே 5 ஆயிரம்...