×

தொடர் மழையால் பசுந்தேயிலை வரத்து அதிகரிப்பு

மஞ்சூர் : குந்தா பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் தோட்டங்களில் பசுந்தேயிலை வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் தேயிலை விவசாயம் முக்கியத்தொழிலாக உள்ளது. மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், நஞ்சநாடு, மேற்குநாடு உள்ளிட்ட 9 கூட்டுறவு ஆலைகள் மற்றும் ஏராளமான தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கி அக்டோபர் இறுதி வரை பெரும்பாலான கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு தினமும் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் கிலோ வரை பசுந்தேயிலை வரத்து காணப்பட்டது. இதன்மூலம், தேயிலை தூள் உற்பத்தி அதிகரித்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் பனி விழத்துவங்கியதுடன் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உறைபனியின் தாக்கமும் அதிகரித்தது.

இதனால், குந்தா பகுதியை சுற்றிலும் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தேயிலை செடிகள் பனியின் தாக்குதலால் கருகி போனது. தேயிலை மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் பசுந்தேயிலை வரத்து பலமடங்கு குறைந்தது. பெரும்பாலான தொழிற்சாலைகளில் நாளொன்றுக்கு வெறும் 8ஆயிரம் கிலோ முதல் 10 ஆயிரம் கிலோ வரை மட்டுமே பசுந்தேயிலை வரத்து காணப்பட்டது.

மேற்குநாடு உள்ளிட்ட பகுதிகளில் தினமும் வெறும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் கிலோ மட்டுமே பசுந்தேயிலை வரத்து இருந்ததால் 3 நாட்களுக்கு ஒருமுறை தேயிலை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. இதனால், தொழிற்சாலைகளில் தேயிலை தூள் உற்பத்தி மூன்றில் ஒரு பங்காக குறைந்துபோனது. மழை அறவே பெய்யாதநிலையில் தோட்டங்களில் தேயிலை மகசூல் கடுமையாக பாதிக்கப் பட்டதால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதுடன் அன்றாட செலவினங்கள், தோட்ட பராமரிப்பு மற்றும் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்கவும் வழியின்றி அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் மஞ்சூர் உள்பட குந்தா பகுதியில் பெரும்பாலான இடங்களிலும் கடந்த சில தினங்களாக அவ்வப்போது பலத்த மழையும் பெரும்பாலான நேரங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது. காலை முதல் பிற்பகல் வரை வெயிலும், பிற்பகலுக்கு மேல் மழையும் என மாறிய காலநிலையால் தேயிலை தோட்டங்களில் மகசூல் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால், பசுந்தேயிலை வரத்தும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கடந்த மாதம் இதே நேரத்தில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் கிலோ வரை மட்டுமே பசுந்தேயிலை வரத்து காணப்பட்ட நிலையில் தற்போது இரு மடங்காக உயர்ந்து தினமும் பசுந்தேயிலை வரத்து 20 ஆயிரம் கிலோ வரை உள்ளதாக தொழிற்சாலை தரப்பில் கூறப்படுகிறது. இதேபோல் மேற்குநாடு பகுதிகளிலும் பசுந்தேயிலை வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.

The post தொடர் மழையால் பசுந்தேயிலை வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Gunda ,Dinakaran ,
× RELATED சந்தனத்தின் மருத்துவ குணங்கள்!