×

மழையால் சேதமான தற்காலிக சாலையில் மண் மூட்டை அடுக்கி வைத்து சீரமைப்பு பணி மேற்கொள்ள எதிர்ப்பு

கூடலூர் : கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை வனப்பகுதியில் கார்குடி, தெப்பக்காடு இடையே இரண்டு இடங்களில் குறுகிய பழைய பாலங்களை அகற்றி புதிய பாலங்கள் அமைக்கும் பணி துவங்கி உள்ளது. புதிய பாலங்கள் கட்டுவதற்காக அவற்றின் அருகிலேயே வாகனங்கள் சென்று வருவதற்காக தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது. நீரோடை அமைந்துள்ள இப்பகுதியில் மண் மூட்டைகளை அடக்கி அமைக்கப்பட்ட சாலை, கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த மழை காரணாக தண்ணீர் அதிகரித்து ஓடியதால் மண் மூட்டைகள் சரிந்து விழுந்து அப்பகுதியில் சாலையில் அரிப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மீண்டும் மண் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கும் பணிகளை ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வருகிறார். இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த தேசிய நெடுஞ்சாலையில் தமிழக- கர்நாடகா இடையே அதிக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள இந்த இரண்டு குறுகிய பாலங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், சாலையில் நடைபெற்று வரும் விரிவாக்க பணிகளுக்காகவும் புதிய பாலம் அமைப்பதற்காக ஒப்பந்தகாரர் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய பாலங்கள் கட்டுவதற்கு முன் அதன் அருகிலேயே தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. மழை நீர் வழிந்து ஓடுவதற்கு போதிய இடைவெளி இல்லாமல் மண் மூட்டைகளை அடுக்கி அந்த தற்காலிக சாலை அமைக்கப்பட்டது.

இதுவரை அந்த சாலையில் வாகனங்கள் இயக்கப்படாத நிலையில், கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் அவ்வப்போது முதுமலை பகுதியில் பெய்த மிதமான மழையில் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மண் மூட்டைகள் சரிந்து தற்காலிக சாலை உடைந்தது.நீரோடை பகுதியில் அமைந்துள்ள இந்த தற்காலிக சாலையில் மழைநீர் வேகமாக வடிந்து செல்லும் வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பழைய பாலங்கள் இரண்டும் பணிகளுக்காக இடிக்கப்பட்டால் இந்த தற்காலிக சாலையிலேயே வாகன போக்குவரத்து முழுமையாக நடைபெறும். பாலங்களைக் கட்டி முடிக்க நீண்ட காலம் எடுக்கும் என்பதாலும், அடுத்து வரும் மழைக் காலத்தில் இந்த நீரோடைகளில் அதிக நீர்வரத்து காரணமாகவும் மீண்டும் இந்த தற்காலிக சாலை பாதிக்கும் நிலை ஏற்படும்.

நாள்தோறும் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், அரசுப் பேருந்துகள், உள்ளூர் பயணிகள் மற்றம் பள்ளி வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்கும் நிலையில் தற்காலிக சாலையில் நீரோடைகளில் வரும் நீர் வழிந்து ஓடுவதற்கு வசதியாக போதிய இடைவெளி விட்டு பாதுகாப்புடன் அமைக்க வேண்டும். ஆனால், ஒப்பந்ததாரரின் பணிகள் தரமற்ற முறையில் உள்ளது.

மழைக்காலங்களில் இருமாநில போக்குவரத்து பாதிக்காத வகையில் இந்த தற்காலிக சாலை பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மழையால் சேதமான தற்காலிக சாலையில் மண் மூட்டை அடுக்கி வைத்து சீரமைப்பு பணி மேற்கொள்ள எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Karkudi ,Deepakadam ,Mutumalai forests ,Mysore National Highway ,Dinakaran ,
× RELATED கடல் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!!