×

மண்ணெண்ணெய் கிடைக்காததால் பொதுமக்கள் வாக்குவாதம் ரேஷன் கடையை திடீரென பூட்டி சென்ற ஊழியர்-நித்திரவிளை அருகே பரபரப்பு

நித்திரவிளை ; நித்திரவிளை அருகே காஞ்ஞாம்புறம் பகுதியில் அமுதம் கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடை உள்ளது. இந்த கடையில் 1282 ஸ்மார்ட் கார்டு உள்ளது. 700க்கும் அதிகமான நபர்களுக்கு மண்ணெண்ணெய் வாங்கும் அனுமதி உண்டு. அதேவேளையில் ஒதுக்கீடு குறைவாக உள்ளதால் ஒரு மாதம் 150 நபர்களுக்கு என சுழற்சி முறையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று இந்த கடையில் மண்ணெண்ணெய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதனால் நேற்று காலை முதல் தகுதியுள்ள 150 நபர்கள் வரிசையில் காத்து நின்று மண்ணெண்ணெய் வாங்கி கொண்டிருந்தனர், ஒரு நபருக்கு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வீதம் வழங்கப்பட்டது. 110 நபர்கள் வாங்கி முடிந்தவுடன் மண்ணெண்ணெய் தீர்ந்து விட்டது. மீதி 40 நபர்களுக்கும் அடுத்த மாதம் மண்ணெண்ணெய் தரலாம் என்று விற்பனையாளர் கூறினார்.

இதனால் மண்ணெண்ணெய் கிடைக்காத நபர்கள் பிரச்சனையில் ஈடுபட்டனர். பிரச்சனை அதிகமானவுடன் விற்பனையாளர் நெஞ்சு வலிக்கிறது மருத்துவமனைக்கு போறேன் என்று கூறிவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றார். இதனால் மேலும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.இது சம்பந்தமாக கொல்லங்கோடு நகராட்சி 12வது வார்டு கவுன்சிலர் ஆல்பர்ட் ஜெபசிங் கூறியதாவது, இந்த நியாயவிலைக் கடை ஒரு மாதத்தில் 10 நாட்கள் கூட திறந்து செயல்படாது, சுகவீனம் காரணமாக இன்று கடைக்கு விடுமுறை என்று நோட்டீஸ் மட்டும் ஒட்டப்பட்டிருக்கும், திறக்கிற நாட்களிலும் சுமார் ஒரு மணி நேரம் ரேஷன் வழங்கி விட்டு கடையை பூட்டி விட்டு விற்பனையாளர் சென்று விடுவார்.

இது சம்பந்தமாக பலமுறை கிள்ளியூர் வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் மாவட்ட வழங்கல் அதிகாரியிடம் போன் மூலம் புகார் தெரிவித்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். வாட்சப்பில் புகார் அனுப்பினால் பார்த்து விட்டு அதற்கு பதிலளிக்காமல் பேசாமல் இருப்பார்கள். இன்றைக்கு பயனாளிகளுக்கு மண்ணெண்ணெய் கொடுப்பதாக கூறி, முதலில் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு 5 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கினார். கடைசியில் 110 நபர்களுக்கு ஒரு லிட்டர் வீதம் வழங்கினார். 40 பேருக்கு மண்ணெண்ணெய் வழங்குவதாக கூறி கைரேகை பதிவு செய்து விட்டு மண்ணெண்ணெய் தீர்ந்து விட்டது, உங்களுக்கு அடுத்த மாதம் மண்ணெண்ணெய் தரலாம் என்று கூறினார். இதனால் கடை ஊழியருக்கும் பொதுமக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளேன் என்று கூறினார்.

இந்நிலையில் சுமார் 12 மணியளவில் சம்பவ இடம் வந்த கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வேணுகோபால், சுகவீனம் என்று கூறி தலைமறைவான கடை ஊழியரை அழைத்து பொதுமக்களுக்கு ரேஷன் அரிசி கொடுக்க சொன்னார். அங்கு வந்த கடை ஊழியர் கடையை திறந்து பொதுமக்களுக்கு ரேஷன் அரிசி மற்றும் பொருட்கள் வழங்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post மண்ணெண்ணெய் கிடைக்காததால் பொதுமக்கள் வாக்குவாதம் ரேஷன் கடையை திடீரென பூட்டி சென்ற ஊழியர்-நித்திரவிளை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Elixir Co ,Bank ,Kanjambaram ,Nitragil ,Dinakaran ,
× RELATED விதிகளை மீறிய வங்கிகளுக்கு அபராதம் விதித்து RBI நடவடிக்கை!!