×

பிரான்மலை கோயிலில் திருக்கல்யாண விழா

 

சிங்கம்புணரி, ஏப்.29: சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் குயிலமுத நாயகி அம்மன் கோயிலில் நேற்று திருக்கல்யாண விழா விமர்சையாக நடந்தது. சிங்கம்புணரி அருகே பாரி ஆண்ட பரம்பு மலை என்னும் பிரான்மலை உள்ளது. 2,500 அடி உயரமுள்ள இம்மலை அடிவாரத்தில் குன்றக்குடி தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருக்கொடுங்குன்ற நாதர் குயிலமுத நாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆகாயம், மத்திபம், பாதாளம் என மூன்று நிலைகளில் சிவன் கட்சியளிக்கிறார். எங்கும் இல்லாத சிறப்பாக மங்கை பாகர் தேனம்மை திருமண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

இக்கோயிலில் கடந்த 24ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் மண்டகப்படி நிகழ்ச்சியாக நடைபெறும் இத்திருவிழாவில் ஐந்தாம் நாளான நேற்று திருக்கல்யாண விழா பெற்றது. காலை 9.30 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய திருக்கொடுங்குன்றநாதர், குயிலமுதநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மாலை மாற்றும் நிகழ்ச்சியும், கொடுங்குன்றநாதர் குயிலமுத நாயகி அம்மனுக்கு மங்கள நாண் பூட்டும் திருக்கல்யாணமும் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பெண்கள் மஞ்சள் கயிற்றை மாற்றி சுவாமியை வழிபட்டனர்.

இதில் பிரான்மலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் 7ம் நாளான நாளை முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி விழாவும், 9ம் நாளான மே 2ம் தேதி திருத்தேரோட்ட விழாவும் நடைபெறும். பத்தாம் நாளான மே 3ம் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை குன்றக்குடி தேவஸ்தானம் செய்துள்ளது.

The post பிரான்மலை கோயிலில் திருக்கல்யாண விழா appeared first on Dinakaran.

Tags : Thirukkalyana Festival ,Temple of BranMalay ,SINGAMPUNARI ,Temple of Amman Temple ,Thirukthungunnadar Guilamudha Nayaki ,Singhamburi ,Tirukkalyana Festival ,Temple ,of FranMalay ,
× RELATED சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்