×

பூந்தமல்லியில் பாஜ பிரமுகர் படுகொலை நீதிமன்றத்தில் 9 பேர் சரண்: காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

சென்னை: பூந்தமல்லி அருகே வெடிகுண்டு வீசி, ஓடஓ விரட்டி வெட்டி பாஜ பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 9 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் பிபிஜிடி சங்கர் (43), பாஜவில் எஸ்சி-எஸ்டி பிரிவு மாநில பொருளாளராக பதவி வகித்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழில், கட்டப்பஞ்சாயத்து செய்ததுடன் அந்த பகுதியில் பிரபல ரவுடியாகவும் வலம் வந்துள்ளார்.

இந்நிலையில் சென்னைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு காரில் வீட்டுக்கு திரும்பியபோது, பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சிக்னல் அருகே, 10க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் காரை வழிமறித்து வெடிகுண்டுகளை வீசினர். அதிர்ச்சியடைந்த சங்கர், உயிரைக் காப்பாற்ற காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, இறங்கி தப்பி ஓடினார். அவரை ஓடஓட விரட்டி சென்ற மர்ம கும்பல், சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது. தகவல் அறிந்த நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பிபிஜிடி சங்கரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த கொலை தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைத்து, அந்த பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

சங்கர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் தொடர்புடையவர்கள் முன்விரோதம் காரணமாக கொலை செய்தார்களா அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி கவுன்சிலர் சாந்தகுமார், ஜெகன், குணா, சரத்குமார், ஆனந்த், சாந்தகுமார், சஞ்சு, உதயகுமார், தினேஷ் உள்ளிட்ட 9 பேர் சங்கர் கொலை வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். பெரும்புதூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் ஸ்கிராப் எடுப்பதில் இவர்களுக்கிடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனால், ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக கொலை நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சரணடைந்துள்ள 9 பேரையும், காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post பூந்தமல்லியில் பாஜ பிரமுகர் படுகொலை நீதிமன்றத்தில் 9 பேர் சரண்: காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு appeared first on Dinakaran.

Tags : Saran ,Baja Pramukhar massacre ,Poonthamalli ,Chennai ,Baja Praghagar massacre ,Odoo ,Baja Prakshara Murder Court ,
× RELATED சிறுமியை கர்ப்பமாக்கிய விவகாரம்;...