×

கோடை மழையால் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து

 

தென்காசி: தென்காசி குற்றாலம் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக வறண்டு காணப்பட்ட அருவிகளில் சிறிதளவு தண்ணீர் விழுகிறது. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயில் காரணமாக பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் கால்நடைகளை தற்காத்துக் கொள்வது குறித்து மாவட்ட நிர்வாகமும் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து அடிக்கும் வெயில் காரணமாக குற்றாலம் அருவிகள் வறண்டு காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பெய்த பலத்த மழையின் காரணமாக நேற்று குற்றாலம் மெயின் அருவியில் சற்று தண்ணீர் விழ துவங்கியது. காலையில் ஓரளவு நன்றாக விழுந்த போதும் பகலில் காணப்பட்ட வெயில் காரணமாக மாலையில் தண்ணீர் வரத்து சற்று குறைந்துவிட்டது. பொதுவாக கோடை காலத்தில் விழும் தண்ணீரானது ஒரு சில தினங்களுக்கு கூட நீடிப்பது இல்லை. தொடர்ந்து மழை இருக்கும் பட்சத்தில் ஒன்றிரண்டு தினங்கள் தண்ணீர் விழ வாய்ப்பு உள்ளது. நேற்று மெயின் அருவியில் விழுந்த தண்ணீரில் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

The post கோடை மழையால் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து appeared first on Dinakaran.

Tags : Kurdalam ,Tenkasi ,Tenkasi Courtalam ,Courtalam ,Dinakaran ,
× RELATED குற்றாலம் அருவிகள் வறண்டு காட்சி அளித்த நிலையில் தற்போது இடியுடன் மழை!