×

25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்குநேரி சுங்கச்சாவடியை கருப்பு கொடியுடன் முற்றுகையிட முயற்சி ஓட்டுனர்கள் சங்கத்தினர் கைது

 

களக்காடு : 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாங்குநேரி சுங்கச்சாவடியை முற்றுகையிட கருப்பு கொடிகளுடன் வந்த ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்ட ஓட்டுனர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் தொழிற்சங்கம், அகில இந்திய உழைப்பாளர் ஓட்டுநர் நலச்சங்கம், சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஓட்டுனர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், ஓட்டுனர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்குநேரி சுங்கச்சாவடி முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்து விட்டனர். எனினும் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என்று ஓட்டுனர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து நாங்குநேரி சுங்கச்சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதற்கிடையே அறிவித்தபடி ஓட்டுனர்கள் சங்கத்தினர் கைகளில் கருப்பு கொடி ஏந்தி, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி நாங்குநேரி சுங்கச்சாவடியை முற்றுகையிட வந்தனர்.

இதில் ஓட்டுனர் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் தொழிற்சங்க மாநில தலைவர் முத்துக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன், மாவட்ட தலைவர் காளிமுத்து, மாவட்ட செயலாளர் பரமசிவன், மாவட்ட பொருளாளர் ஆழ்வார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், மாவட்ட ஆலோசகர் பாலமுருகன், அகில இந்திய உழைப்பாளர் ஓட்டுநர் நல சங்க மாநில துணைத்தலைவர் காளிதாஸ், மாவட்ட தலைவர் சின்னத்துரை, மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டியன், ஜெயபாண்டி, சிஐடியு சங்க மாவட்ட தலைவர் சங்கர் சர்மா உள்பட 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

The post 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்குநேரி சுங்கச்சாவடியை கருப்பு கொடியுடன் முற்றுகையிட முயற்சி ஓட்டுனர்கள் சங்கத்தினர் கைது appeared first on Dinakaran.

Tags : Drivers Commission ,Nangkuneri Tankhanadi ,Nanguneri Sunkhanadi ,Nangkuneri Tariff ,Dinakaran ,
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...