×

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் அனைத்து வார்டுகளிலும் பாகுபாடின்றி வளர்ச்சி பணி மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

தூத்துக்குடி, ஏப்.29: தூத்துக்குடி மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் கட்சி பாகுபாடின்றி வளர்ச்சி பணிகள் நடந்து வருவதாக மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். கமிஷனர் தினேஷ்குமார், துணைமேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் துவக்கத்தில் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் மந்திரமூர்த்தி எழுந்து, ‘தொழிலாளர் வேலைசட்டம் திருத்தம், முத்திரை தாள் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டிப்பதாக கூறி வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.

தொடர்ந்து கூட்ட அரங்கில் முன்பு வந்து கோஷம் எழுப்பினார். உடனடியாக மேயர் அவரை வெளியேற்றுமாறு கூறினார். அப்போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த திமுக கவுன்சிலர்கள், மந்திரமூர்த்தியை சூழ்ந்து கொண்டு கோஷம் எழுப்பியவாறு கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் வெற்றிசெல்வன், பத்மாவதி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் கூட்டத்தில் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பேசுகையில், ‘தூத்துக்குடி விஎம்எஸ்.நகரில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அந்த பகுதியில் கூடுதல் நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். மணிநகர் பகுதியில் வாகன நிறுத்தும் வசதி இல்லாத திருமண மண்டபங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்யாநகர் பகுதியில் தெருகுழாயில் டியூப் போட்டு குடிநீர் பிடிப்பதால் சீரான குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்,‘மாநகராட்சி பகுதியில் கோடைகாலத்திலும் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் புகார்கள் உள்ளன. அதனை கமிஷனர் சரி செய்து வருகிறார். நேற்று மாநகராட்சி பகுதியில் அனுமதி இன்றி இயங்கிய இரண்டு குடிநீர் நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு உள்ளன. மாநகராட்சி பகுதிக்குள் எந்த இடத்திலும் குடிநீர் உறிஞ்சி எடுக்க அனுமதி கிடையாது.
மாநகராட்சி பகுதிக்குள் மினரல் வாட்டர் நிறுவனம் அமைக்க அனுமதி இல்லை. அவ்வாறு செயல்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை பணிகளும் நடந்து வருகிறது.மேலும் ரூ.24 கோடி செலவில் சாலைகள் அமைப்பதற்கு முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.

தூத்துக்குடி நகரை தூய்மையான நகரமாகவும், மாசில்லா நகரமாகவும் மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் கோவில்கள், பள்ளி மாணவர்கள் செல்லும் சாலைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சியில் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1100 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதேபோன்று பாண்டுரங்கன் தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 650 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியை அறிஞர் அண்ணா மண்டபம் அருகில் இடமாற்றம் செய்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளி முழுமையாக மாணவிகள் மட்டும் பயிலும் வகையில் பெண்கள் பள்ளிக்கூடமாக மாற்றப்பட உள்ளது’ என்றார்.

The post தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் அனைத்து வார்டுகளிலும் பாகுபாடின்றி வளர்ச்சி பணி மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Municipal Corporation ,Mayor ,Jagan Periyasamy ,Municipal ,Corporation ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!