×

கோடைவிடுமுறைக்கு பிறகு ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

சென்னை: கோடைவிடுமுறைக்கு பிறகு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்தது. அப்போது பள்ளிக்கல்வித்துறையின் 2023-2024ம் ஆண்டின் நாட்காட்டியை அமைச்சர் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது: அடுத்த கல்வி ஆண்டுக்கான தொடக்க நாள் முதல் இறுதி வேலை நாள் வரை உள்ள விவரங்கள் அடங்கிய நாட்காட்டியை வெளியிடுகிறோம். இதன்படி 2023-2024ம் கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்குகிறது.

ஜூன் 1ம் தேதி அன்று 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும். 5ம் தேதி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும். அடுத்த கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகளை பொருத்தவரையில் மார்ச் 18ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கும், மார்ச் 19ம் தேதி பிளஸ்1 வகுப்புக்கும், ஏப்ரல் 8ம் தேதி 10ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் தொடங்கும். கோடைவிடுமுறை நாளை முதல் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 30 முதல் 40 லட்சம் மாணவ மாணவியர் இந்த விடுமுறையில் வீட்டில் இருப்பார்கள். இந்த காலத்தை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவ மாணவியர் யாரும் நீர் நிலைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். பெரியவர்கள் துணையில்லாமல் செல்லக்கூடாது. கடந்த 2014-2021 வரை பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பொருட்கள் வழங்கியதில் அதிக காலதாமதம் ஆகியுள்ளது. குறிப்பாக ஒரு ஆண்டில் 14, 15, 9 மாதங்கள் கடந்தும் வழங்கப்பட்டுள்ளது. அப்படி காலதாதமாக வழங்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். தாமதங்கள் குறைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

The post கோடைவிடுமுறைக்கு பிறகு ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Magesh ,Chennai ,School Education Minister ,Magesh Khesh ,Makesh ,
× RELATED கூட்டுறவு வங்கிகளில் கல்விக்கடன்...