×

கர்நாடகத்தில் ராகி கொள்முதல் செய்யக்கூடாது

தர்மபுரி, ஏப்.29: தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் சிறு, குறு தொழிலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். காவிரிநீர் தர மறுக்கும் கர்நாடக மாநிலத்தில் ராகி கொள்முதல் செய்யக்கூடாது. மாவட்டத்தில் மயில்கள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. நிலகிரி மாவட்டத்தில் இருந்து குள்ளநரி பிடித்து தர்மபுரி வனத்தில் விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் பிரியா, வேளாண் இணை இயக்குனர் விஜயா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மாலினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) குணசேகரன், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ராமதாஸ், கால்நடைதுறை துணை இயக்குனர் சுவாமிநாதன் மற்றும் விவசாயிகள்,சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்ஏ சின்னசாமி: தர்மபுரி – ஓசூர் விரைவு நான்கு வழிச்சாலை அமைக்குப்பணி துரிதமாக நடக்கிறது. சோகத்தூர் அருகே நெடுஞ்சாலையில் பெய்கின்ற மழைநீர் விளைநிலங்களுக்குள் அப்படியே வழிந்தோடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த மழைநீரை கால்வாய் அமைத்து ஏரி பகுதிகளில் இறங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது பூமிக்குள் செல்லும்வகையில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை நேற்றுடன் முடிந்தது. அரவைக்காக இருக்கும் 1500 டன் கரும்புகளை கோபாலாபுரம் சுப்பிரமணியசிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பு இருக்கும் 1500 டன் கரும்புகளையும் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை செய்து, அரவையை முடித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடப்பாண்டு உலகம் முழுவதும் சிறுதானிய ஆண்டாக கடைபிடிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் சிறுதானிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 1,500 ஏக்கரில் ராகி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் மூலம் குடும்பத்திற்கு 2 கிலோ ராகி வழங்க, தர்மபுரி மாவட்டத்தில் விளையும் ராகிகளை கொள்முதல் செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் தேவையான அளவு ராகி விளைகிறது. எனவே கர்நாடக மாநிலத்திற்கு சென்று ராகி கொள்முதல் செய்யக்கூடாது. தர்மபுரி மாவட்டத்தில் போதவில்லை என்றால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராகி கொள்முதல் செய்யலாம். காவிரிநீர் தர மறுக்கும் கர்நாடக மாநிலத்தில் தர்மபுரி மாவட்டத்திற்காக ராகி கொள்முதல் செய்யக்கூடாது. தற்போது ஒரு கிலோ ராகி ₹35க்கு விற்கப்படுகிறது.

ஏரிகளில் முட்செடிகள் காடுகள் போன்று வளர்ந்து காணப்படுகிறது. இதனால் மலைநீர் தேங்குவதில்லை. எனவே ஏரிகளில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்டு கட்சி விவசாய சங்க செயலாளர் எஸ்.சின்னசாமி: தர்மபுரி மாவட்டத்தில் விவசாயம் செழிப்படைய ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் விவசாய பணிகளும் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அடையாள அட்டை வழங்கப்பட்ட அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.
விவசாய சங்க பிரதிநிதி பிரதாபன்: தர்மபுரியில் அமைக்கப்பட்டு வரும் சிப்காட் தொழில்பேட்டையில் விவசாயம் சார்ந்த மதிப்பு கூட்டு பொருட்கள் செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். சிறு, குறு, நடுத்த தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒரே நிறுவனத்திற்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்யக்கூடாது.

பூர்விக சொந்த நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் மாற்றி ஆன்லைன் மூலம் பட்டா, சிட்டா மாற்றப்படுகிறது. அந்த நிலங்கள் எங்கள் நிலம் தான் என்று விவசாயிகள் உண்மை தன்மையை நிரூபிக்க விஏஓ, ஆர்.ஐ., தாசில்தார், டிஆர்ஓ உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமாதங்கள் அலைந்தாலும் பணிகள் ஒன்றும் முடிவதில்லை. பட்டா, சிட்டா விவகாரத்தில் விவசாயிகள், பொதுமக்கள் அலைக்கழிப்படுகின்றனர். விவசாயிகள் பிரதாபன், கிருஷ்ணன், உதயகுமார்: தர்மபுரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மயில் பார்ப்பது அரிதாக இருந்தது. இப்போது மயில் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் தர்மபுரி நகரத்தை சுற்றி கூட்டம் கூட்டமாக மயில்கள் சுற்றித்திரிகின்றன. வயல்களில் இறங்கி நெல் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன.

இதற்கு வனத்துறை மூலம் குள்ளநரி வளர்க்க வேண்டும். தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் குள்ளநரி காணுவது அரிதாக உள்ளது. குள்ளநரிகள் இருந்தால் மயில்கள் காட்டுக்குள் சென்றுவிடும். எனவே நீலகிரி மாவட்டத்தில் இருந்து குள்ளநரி பிடித்து வந்து தர்மபுரி வனப்பகுதியில் விட வேண்டும். குள்ளநரி சத்தம் கேட்டால் மயில்கள் பறந்துவிடும். தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் வேளாண் இயந்திரங்களான டிராக்டர், பவர் டிரில்லர் உள்ளிட்டவைகள் வாடகைக்கு விடப்பட்ட இயந்திரங்கள் முறையாக பராமரிப்பு இன்றி துருபிடித்து இயக்க முடியாத அளவுக்கு உள்ளது. கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் கேள்விக்கு கலெக்டர் சாந்தி பேசியதாவது: தர்மபுரி – ஓசூர் விரைவு நான்கு வழிச்சாலையில் இருந்து மழைநீர் விளைநிலங்களுக்குள் நேரடியாக செல்லாமலும், ஒருகால்வாய் மூலம் ஏரிக்கு திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்படும். பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருப்பு இருக்கும் கரும்புகளை அரவை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் போதுமான அளவு ராகி இல்லை. இருந்தாலும், தர்மபுரி மாவட்டத்தில் விளையும் ராகிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் மூலம் பட்டா, சிட்டா மாற்றுவது தடுக்கப்படும். தேசிய பறவையான மயில்கள் விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க மாற்று ஏற்பாடு வனத்துறை மூலம் கண்டுபிடிக்கப்படும். ஏரிகளில் முட்செடிகள் வளர்ந்திருப்பதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post கர்நாடகத்தில் ராகி கொள்முதல் செய்யக்கூடாது appeared first on Dinakaran.

Tags : Ragi ,Karnataka ,Dharmapuri ,Chipkot Industrial Estate ,Dinakaran ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி