×

257 ரன் குவித்தது லக்னோ

மொகாலி: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன் குவித்து நடப்பு சீசனின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் தவான் முதலில் பந்துவீச முடிவு செய்தார். கேப்டன் ராகுல், கைல் மேயர்ஸ் இணைந்து லக்னோ இன்னிங்சை தொடங்கினர். ராகுல் 12 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் வெளியேறினார். அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த மேயர்ஸ் 54 ரன் (24 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ரபாடா பந்துவீச்சில் தவான் வசம் பிடிபட்டார்.

இதையடுத்து, ஆயுஷ் பதோனி – மார்கஸ் ஸ்டாய்னிஸ் இணைந்து பஞ்சாப் பந்துவீச்சை பதம் பார்த்தனர். பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட இந்த ஜோடி, 3வது விக்கெட்டுக்கு 46 பந்தில் 89 ரன் சேர்த்து மிரட்டியது. பதோனி 43 ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த நிகோலஸ் பூரனும் அதிரடியில் இறங்க லக்னோ ஸ்கோர் 200 ரன்னை தாண்டி மின்னல் வேகத்தில் உயர்ந்தது.
ஸ்டாய்னிஸ் 72 ரன் (40 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்), பூரன் 45 ரன் (19 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர்.

லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன் குவித்து அசத்தியது. நடப்பு சீசனின் அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக 2013ல் ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன் குவித்த சாதனை நூலிழையில் தப்பியது. தீபக் ஹூடா 11 ரன், க்ருணால் பாண்டியா 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.பஞ்சாப் பந்துவீச்சில் ரபாடா 2, அர்ஷ்தீப், சாம் கரன், லிவிங்ஸ்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது.

The post 257 ரன் குவித்தது லக்னோ appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Mogali ,IPL League ,Punjab Kings ,Lucknow Super Giants ,Dinakaran ,
× RELATED மும்பை இந்தியன்சை வீழ்த்தியது லக்னோ