×

2வது டெஸ்டிலும் இன்னிங்ஸ் வெற்றி தொடரை கைப்பற்றியது இலங்கை: அயர்லாந்து ஒயிட்வாஷ்

காலே: அயர்லாந்து அணியுடனான 2வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 10 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இலங்கை அணி, 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயர்லாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதியது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த முதல் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்தி முன்னிலை பெற்றது. அதே மைதானத்தில் கடந்த 24ம் தேதி தொடங்கிய 2வது டெஸ்டில், டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 492 ரன் குவித்தது. பால்பிர்னி 95, ஸ்டர்லிங் 103, டக்கர் 80, கேம்பர் 111 ரன் விளாசினர்.

இலங்கை பந்துவீச்சில் பிரபாத் 5 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 704 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. மதுஷ்கா 205, கேப்டன் கருணரத்னே 115, குசால் 245, மேத்யூஸ் 100* ரன் அடித்தனர். இதைத் தொடர்ந்து, 212 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து, 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன் எடுத்திருந்தது. பால்பிர்னி 18 ரன், ஹாரி டெக்டர் 7 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

பால்பிர்னி 46 ரன் (101 பந்து, 5 சிக்சர்), டெக்டர் 85 ரன் (189 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாச, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். அயர்லாந்து 2வது இன்னிங்சில் 202 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது (77.3 ஓவர்). இலங்கை பந்துவீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 5, அசிதா 3, பிரபாத் 2 விக்கெட் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 10 ரன் வித்தியாசத்தில் வென்ற இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. பிரபாத் ஜெயசூரியா ஆட்ட நாயகன் விருதும், குசால் மெண்டிஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

The post 2வது டெஸ்டிலும் இன்னிங்ஸ் வெற்றி தொடரை கைப்பற்றியது இலங்கை: அயர்லாந்து ஒயிட்வாஷ் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Ireland ,White Wash ,Kale ,Dinakaran ,
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...