×

ஏ.டி.பி சேலஞ்சர் டூர் இண்டர்நேஷனல் ஆண்கள் டென்னிஸ் போட்டிக்கு ரூ.1 கோடி அரசு நிதியுதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாட்டில் டென்னிஸ் விளையாட்டை ஊக்குவிக்க தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜிடம் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி அரசின் நிதி உதவியாக வழங்கினார். கடந்த 21 ஆண்டுகளாக தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் அமைப்புக்கு சர்வதேச போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி அளித்து வருகிறது. தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷனின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டில் டென்னிஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ஏ.டி.பி சேலஞ்சர் 100 ஆடவர் சர்வதேச டென்னிஸ் போட்டிகளை நடத்த 2023ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1 கோடி வீதம் வழங்க 30.3.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையை செயல்படுத்தும் விதமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கடந்த 12.2.2023 முதல் 19.2.2023 வரை நடந்த ஏ.டி.பி சேலஞ்சர் டூர் 100 இண்டர்நேஷனல் ஆண்கள் டென்னிஸ் போட்டிக்கான அரசின் நிதியுதவியாக ரூ.1 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜிடம் வழங்கினார். அப்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு டென்னிஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post ஏ.டி.பி சேலஞ்சர் டூர் இண்டர்நேஷனல் ஆண்கள் டென்னிஸ் போட்டிக்கு ரூ.1 கோடி அரசு நிதியுதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : ATP Challenger Tour International Men's Tennis Tournament ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Tamil Nadu Tennis Association ,President ,Vijay Amritraj ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...