×

தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டலத்தில் ரூ.13.3 கோடியில் திட்ட பணிகள்: மண்டல குழு தலைவர் தகவல்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டலத்தில் ரூ.13.3 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். தாம்பரம் மாநகராட்சியின் 2வது மண்டல அலுவலகத்தில், மண்டலத் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை தலைமையில் மண்டல குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 2வது மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தண்ணீர் பிரச்னை, குப்பை அகற்றுதல், சாலை சீரமைப்பு, தெருவிளக்கு, பூங்கா பராமரிப்பு, தெருநாய் தொல்லை என பல்வேறு கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினர்கள் முன் வைத்தனர்.

இதற்கு பதிலளித்த மண்டல தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். கூட்டத்தில் ரூ.2.50 கோடி செலவில் விசாலாட்சிபுரம், ஆர்.கே.வி.அவென்யூ, சித்ரா டவுன்ஷிப், கச்சேரி மலை, பாலாஜி நகர், காமாட்சி நகர், லட்சுமி நகர், சுபம் நகர், ஜி.ஜி.என் நகர், திருவள்ளுவர் நகர், ஏ.ஆர்.ஜி நகர், அருள்முருகன் நகர், காசி நகர் பெருமாள் நகர், ஏ.ஜி.எஸ் நகர், பவானி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்களை சீரமைப்பது, 9, 15, 16, 17வது வார்டுகளில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பது என மொத்தம் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அப்போது, மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை கூறுகையில், ‘‘தாம்பரம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை, நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.80 கோடி செலவில் சீரமைப்பது, ரூ.1.30 கோடி செலவில் குடிநீர் பழுது பார்த்தல், சிறப்பு மானிய நிதி ரூ.4.92 கோடி செலவில் மழைநீர் கால்வாய் மற்றும் சிறுபாலம் அமைத்தல், ரூ.3.28 கோடி செலவில் விடுப்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் பதித்தல் என மொத்தம் ரூ.13.3 கோடியில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

The post தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டலத்தில் ரூ.13.3 கோடியில் திட்ட பணிகள்: மண்டல குழு தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thambaram Corporation ,Zonal Committee ,Thambaram ,Dhambaram Corporation ,2nd ,Dinakaran ,
× RELATED வீடுகள், கட்டுமான பணியிடங்களில்...