×

‘கொடை’யில் கொட்டியது கோடை மழை: கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

பெரியகுளம்: கொடைக்கானலில் மழை கொட்டியதை தொடர்ந்து, இன்று காலை கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது கோடை சீசன் களைகட்டி வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை சீசன் காலத்தில் நகரில் இதமான சூழல் நிலவும். அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்யும். ஆனால், கடந்த சில தினங்களாக கொடைக்கானலில் கோடை மழை கொட்டி வருகிறது. நேற்று ஒரே நாளில் 10 செ.மீ மழை பதிவாகியது.

இதனால், நகரில் நிலவிய இதமான சூழல் மாறி, குளிரான சூழல் நிலவி வருகிறது. நகருக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் இந்த குளிர் சூழலை ரசித்து சென்றனர். நகரில் பெய்து வரும் கோடை மழை காரணமாக மேல்மலை மற்றும் கீழ்மலைப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை பயிர்களையும் நடத்தொடங்கி உள்ளனர். உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ், நூல் கோல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிடத் தொடங்கியுள்ளனர். இந்த கோடை மழை சாதகமாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் கனமழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோடை காலம் துவங்கியது முதல் கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது மழை பெய்யும் கனமழையால் அருவியில், கோடையில் இரண்டாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் நீர்வரத்து குறைந்து சீராகும் வரை குளிக்க தடை விதித்துள்ளதாக தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

The post ‘கொடை’யில் கொட்டியது கோடை மழை: கும்பக்கரை அருவியில் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Kumbakkar ,Periyakulam ,Kodaikanal ,Kodi ,Gumbakkar ,Dinakaran ,
× RELATED சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் பயிர்கள் சேதம்..!!