×

திற்பரப்பில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்: படகு சவாரி ‘படு ஜோர்’

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையால் திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். படகு சவாரியும் களைகட்டியது. கன்னியாகுமரியில் உள்ள நீர்நிலை சார்ந்த சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவியும் ஒன்று. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு இங்கு அருவியாக விழுகிறது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் கோதையாற்றில் தண்ணீர் இன்றி பாறைகளாக தென்பட்டது. திற்பரப்பு அருவியிலும் மிகக்குறைந்த அளவிலேயே தண்ணீர் விழுந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையோரம் மற்றும் திற்பரப்பு சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோதையாற்றில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது. இதனால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து விட்டன. இன்று பள்ளிகள் செயல்படும் கடைசி நாளாக கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு பகுதிக்கு வந்தவண்ணம் உள்ளனர். நேற்றும் குடும்பம் குடும்பமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே வந்து அருவியில் ஆனந்த குளியல் போட்டனர். அருவி அருகேயுள்ள நீச்சல் குளத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளித்து மகிழ்ந்தனர்.

தற்போது குளுகுளு சீசன் நிலவுவதால் திற்பரப்பு முழுவதும் ஏசி போட்டது போன்று ஜிலுஜிலுவென இருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். அருவியில் உல்லாச குளியல் போட்டதோடு மட்டுமல்லாமல் தடுப்பணையில் படகு சவாரி செய்து இயற்கை பகுதிகளை கண்குளிர கண்டு ரசித்தனர். இன்றும் காலை முதலே சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர தொடங்கினர். மக்கள் வெள்ளத்தால் திற்பரப்பு பகுதி களைகட்டியது.

The post திற்பரப்பில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்: படகு சவாரி ‘படு ஜோர்’ appeared first on Dinakaran.

Tags : Tilparap ,Kulasekaram ,Kanyakumari district ,Tilparapu ,
× RELATED குலசேகரம் அருகே வீட்டில் இருந்து...