×

புனித நூலை அவமதித்ததற்காக இளைஞன் கொடூர கொலை: ‘நிஹாங்’ சீக்கியரின் வரலாற்று பின்னணி என்ன?: அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி

புதுடெல்லி: புனித நூலை அவமதித்ததற்காக டெல்லி சிங்கு எல்லையில் இளைஞன் ஒருவரை, நிஹாங் சீக்கியர் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் குறித்த வரலாறும் பரபரப்பாக பேசப்படுகிறது. டெல்லி – அரியானாவின் சிங்கு எல்லையிலும் விவசாயிகள் கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், சிங்கு எல்லையில் உள்ள போராட்ட இடத்தில் இளைஞரின் சடலம், அங்கிருந்த பேரிகார்டு எனப்படும் தடுப்பு வேலியில் தொங்கிய நிலையில் கிடந்தது. அவரது ஒரு கை வெட்டப்பட்டும், உடலின் மற்ற பாகங்கள் வெட்டுக் காயங்களுடன் பேரிகார்டில் தொங்கவிடப்பட்டது. குண்டலி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கொடூரமான இந்த கொலையை செய்தது சீக்கியக் குழுவான ‘நிஹாங்’ பிரிவை சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கொடூரமான முறையில் லக்பீர் சிங் (33)  இளைஞரை கொன்ற நிஹாங் பிரிவைச் சேர்ந்த சரப்ஜித் சிங் என்பவர் நேற்றிரவு போலீசில் சரணடைந்தார். போலீசாரின் விசாரணையில், சீக்கிய மத புனித நூலை (குரு கிரந்த் சாகிப்) அவமதித்ததற்காக, அந்த இளைஞனை கொலை செய்ததாக சரப்ஜித் சிங் தெரிவித்துள்ளார். அதையடுத்து, அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொடூரமான கொலையின் புகைப்படம், சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த பலரும், இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து வருகின்றனர். ஆனால் இந்த கொடூர கொலை சம்பவத்தை செய்தது ‘நிஹாங் சீக்கியர்’ என்பது தெரியவந்ததால், நிஹாங் சீக்கியர் குறித்த பின்னணி வெளியாகி உள்ளது. நிஹாங் சீக்கியர் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? என்பது ஒரு விவாதப் பொருளாக மாறிவிட்டது. உண்மையில், ‘நிஹாங்’ என்பது ஒரு பாரசீக வார்த்தை. முதலை, தாமரை மற்றும் வாள் ஆகியன அவற்றின் அடையாளங்கள். அதாவது அச்சமின்மை மற்றும் தூய்மையை குறிக்கிறது. ஆங்கிலேய ஆட்சிக்கு முன்பு நாட்டை ஆண்டுவந்த முகலாயர்களால், சீக்கியர்களில் மிகவும் ஆக்ரோஷமான பிரிவினருக்கு ‘நிஷாங்’ என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. தண்ணீருக்குள் இருக்கும் ஒரு முதலையை தோற்கடிப்பது எவ்வளது கடினமோ, அதுபோலவே போரில் ‘நிஹாங்’க்களை தோற்கடிப்பது என்பது எளிதான விஷயம் அல்ல என்று நம்பப்படுகிறது. சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங், நிஹாங் சீக்கியர்களை போராளியாக உருவாக்கிய பெருமைக்குரியவர். இவர், தனது மகன்கள் அஜித் சிங், ஜுஜர் சிங், ஜோராவர் சிங், ஃபதே சிங் ஆகியோருக்கு போர் கலையை கற்றுக் கொடுத்தார். இதனை பின்பற்றும் நிஹாங் சீக்கியர்களின் முக்கிய அடையாளமாக, நீல நிற உடை அணிதல், குதிரையின் மீது அமர்ந்து கொண்டு மக்களை காத்தல், தலையில் ஒரு பெரிய தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு, கையில் வாள் மற்றும் ஈட்டியுடன் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளுதல் ஆகியனவாகும். மேலும், நிஹாங் சீக்கியர்கள் தங்கள் மதத்திற்காக தங்களை அர்ப்பணிக்கின்றனர். சீக்கியர்கள் வசிக்கும் மாநிலங்களில், நிஹாங் சீக்கியர்கள் குழுவாக செயல்பட்டு வருகின்றனர். நிஹாங்குகள் சீக்கிய சமுதாயத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக  கருதப்படுகிறார்கள்.”சமீபத்தில் நடந்த சம்பவங்கள்…”* கடந்த 2020 ஏப்ரல் மாதம் கொரோனா ஊரடங்கு காலத்தில் போலீஸ்காரர் ஒருவரின் கையை நிஹாங் சீக்கியர் ஒருவர் வெட்டினார். இந்த சம்பவத்தில், நிஹாங் சீக்கியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். * கடந்த ஜனவரியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு, கோட்டையின் வாசலில் இருந்த கொடிக்கம்பத்தில் கொடியை நிஹாங் சீக்கியர்கள் ஏற்றினர். போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் நவ்நீத் (45) என்பவர் உயிரிழந்தார். அன்றையதினம், குதிரையின் மீது அமர்ந்துகொண்டு நீல நிற உடையில் கையில் வாளோடு காவல்துறையினரிடம் இருந்து டிராக்டர் பேரணியை பாதுகாக்கும் பணியில் நிஹாங் சீக்கியர்கள் ஈடுபட்டிருந்தனர்….

The post புனித நூலை அவமதித்ததற்காக இளைஞன் கொடூர கொலை: ‘நிஹாங்’ சீக்கியரின் வரலாற்று பின்னணி என்ன?: அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Nihang ,Sikhs ,New Delhi ,Nihang Sikh ,Delhi ,Singhu ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...