×

வால்பாறை பள்ளியில் திடீர் வாந்தி, மயக்கம்; மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 18 மாணவர்கள் வீடு திரும்பினர்: 7 பேருக்கு தொடர் சிகிச்சை

வால்பாறை: வால்பாறை அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின் 18 மாணவர்கள் வீடு திரும்பினர். 7 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலை கல்லுாரி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் பயிற்று மொழி பள்ளியாக உள்ளது. இப்பள்ளியில் 65 பேர் பயிலுகின்றனர். கடந்த 3 நாட்களாக ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நடைபெற்ற நிலையில், பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. 45 மாணவர்கள் வந்திருந்தனர்.

மதியம் வழக்கம்போல் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட 25 மாணவர்கள் வாந்தி எடுத்து மயங்கினர். உடனே ஆம்புலன்ஸ் மூலம் 25 பேரை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு 18 மாணவர்கள் உடல்நலம் தேறி வீடு திரும்பினர். 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர்கள், பொதுமக்கள் அரசு மருத்துவமனை முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வால்பாறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post வால்பாறை பள்ளியில் திடீர் வாந்தி, மயக்கம்; மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 18 மாணவர்கள் வீடு திரும்பினர்: 7 பேருக்கு தொடர் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Walpara School ,WALBARA ,Walbara Government School ,Walbara School ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு விழா வால்பாறையில்...