×

திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்: பக்தர்கள் குவிந்தனர்

திருவள்ளூர்: சித்திரை பிரமோற்சவத்தை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகப்பெருமாள் கோயிலில் இன்று கருடசேவை உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூரில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக ஸ்ரீவைத்திய வீரராகவப்பெருமாள் கோயில் விளங்குகிறது. இங்கு ஆண்டுக்கு 2 முறை பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். தை பிரமோற்சவத்திற்கு பிறகு சைத்ர பிரமோற்சவம் எனும் சித்திரை பிரமோற்சவத்தை முன்னிட்டு இன்று கருட சேவை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் வீரராகவப்பெருமாள், தேவி, பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அதன்படி கடந்த 26ம்தேதி விடியற்காலை 4.30 மணிக்கு கொடியேற்றமும், காலை 6 மணிக்கு தங்க சப்பரம் புறப்பாடும் நடைபெற்றது. 9.30 மணிக்கு பக்திஉலாவும், 10.30 மணிக்கு திருமஞ்சனமும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சிம்ம வாகன புறப்பாடும் நடைபெற்றது. நேற்று 27ம்தேதி காலை ஹம்சவாகனத்தில் 5 மணிக்கு வீதி புறப்பாடும் 8 மணிக்கு பக்தி உலாவும், 9.30 மணிக்கு திருமஞ்சனமும் இரவு 7 மணிக்கு சூர்ய பிரபை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று 28ம்தேதி காலை கருட சேவை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோபுர தரிசனமும், மாலை 5.30 மணிக்கு திருவீதி புறப்பாடும், 7.30 மணிக்கு ஹனுமந்த வாஹனம் புறப்பாடு நிகழ்ச்சியும், நாளை காலை 5 மணிக்கு சேஷவாகனம், பரமபதநாதன் திருக்கோலமும், இரவு 7 மணிக்கு சந்திரபிரபை வாகன புறப்பாடும், 30ம்தேதி காலை 4 மணிக்கு நாச்சியார் திருக்கோலமும், மாலை 7 மணிக்கு யாளி வாகன புறப்பாடும் நடை பெறுகிறது.

மே மாதம் 1ம்தேதி காலை 5 மணிக்கு வேணுகோபாலன் திருக்கோலமும், சூர்ணாபிஷேகமும், மாலை 5 மணிக்கு வெள்ளி சப்பரமும், இரவு 7 மணிக்கு யானை வாகன புறப்பாடும் நடைபெறுகிறது. 2ம்தேதி காலை 4.45 மணிக்கு திருத்தேருக்கு பெருமாள் எழுந்தருளுதலும், 7.30 மணிக்கு திருத்தேர் புறப்பாடும், இரவு 9.30 மணிக்கு கோயிலுக்கு பெருமாள் எழுந்தருளுதலும் நடைபெறுகிறது. 3ம்தேதி காலை 9.30 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 3 மணிக்கு திருப்பாதம் சாடி திருமஞ்சனமும் 7.30 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், 4ம்தேதி விடியற்காலை 4 மணிக்கு ஆள்மேல் பல்லக்கும், 10.30 மணிக்கு தீர்த்த வாரியும், இரவு 7 மணிக்கு விஜயகோடி விமான நிகழ்ச்சியும், 5ம்தேதி காலை 9 மணிக்கு த்வாதசாராதனமும், இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லக்கும், 11.30 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் சித்திரை பிரமோற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத் மற்றும் கோயில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்துள்ளனர்.

The post திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்: பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Karuda ,Thiruvallur Veeraragavaperumal Temple ,Thiruvallur ,Shitra Pramoreshava ,Thiruvallur Veeragapperumal temple ,Thiruvallur Veeragavaperumal Temple ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்