×

ஜகாத் –ஏழைகளின் உரிமைப் பங்கு

இஸ்லாமிய வாழ்வியல்

சமுதாயத்திலிருந்து வறுமையை ஒழிப்பதற்காகவும் சமுதாயப் பாதுகாப்பிற்காகவும் இஸ்லாம் `ஜகாத்’ எனும் பொருளாதாரத் திட்டத்தை வசதியுள்ளவர்கள் மீது கடமையாக்கியுள்ளது. பணக்காரர்களின் செல்வத்தில் ஏழைகளுக்குள்ள உரிமைப் பங்குதான் ஜகாத். “விரும்பினால் கொடுக்கலாம், இல்லை எனில் விட்டுவிடலாம்” என்பது ஜகாத்திற்குப் பொருந்தாது. ஏனெனில் ஏழை எளியோரின் இந்த உரிமைப் பங்கைக் கட்டாயம் கொடுத்தே ஆகவேண்டும், இது வேதத்தின் கட்டளை – இறைவனின் ஆணை.

ஒருவர் தமது தேவைக்குப்போக மிஞ்சியுள்ள சொத்துகளிலிருந்து இரண்டைரை விழுக்காடு கட்டாயம் இறைவழியில் செலவழித்தே ஆகவேண்டும். இந்த ஜகாத் தொகை யார் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் இறைவனே பட்டியல் இட்டுத் தந்துள்ளான்.

இதோ, அந்தப் பட்டியல்:

“இந்த தான தர்மங்கள் எல்லாம் (அதாவது ஜகாத் செல்வம்)

1. ஏழைகள், 2. வறியவர்கள் (ஃபகீர்கள்), 3. இந்த தான தர்மங்களை வசூலிக்கவும், பங்கிடவும் நியமிக்கப்பட்ட பணியாளர்கள், 4. உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டியவர்கள், 5. பிடரிகளை விடுவிப்பதற்கு, 6. கடனாளிகளுக்கு, 7. இறைவழியில் செலவு செய்வதற்கு, 8. பயணிகளுக்கு உரியனவாகும். இது இறைவனால் விதிக்கப்பட்ட கடமையாகும்.

மேலும், இறைவன் யாவற்றையும் அறிந்தோனும் நுண்ணறிவாளனுமாயிருக்கிறான்.” (குர்ஆன் 9:60) பெரும்பாலும், சமுதாயத்திலுள்ள ஏழை எளியவர்கள், தேவையுடையவர்கள் அனைவரும் இந்த எட்டுப் பிரிவுக்குள் அடங்கிவிடுவர். ஃபகீர் எனும் சொல் தமது வாழ்க்கையை நடத்திச்செல்ல அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்கும் மனிதனுக்குச் சொல்லப்படும். ஏழைகள் என்பவர்கள் மிக மோசமான வறிய நிலையில் இருப்பவர்கள்.

உள்ளங்கள் இணக்கமாக்கப்படவேண்டியவர்கள் என்றால், அது மார்க்கத்தைப் புதிதாக ஏற்றுக்கொண்டவர்களைக் குறிக்கும். இறைநெறியை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்திற்காக அவர்கள் ஊரையும் உறவையும் துறந்து நிர்க்கதியாக வந்திருக்கலாம். அவர்களின் உரிய மறுவாழ்வுக்காக ஜகாத் நிதியிலிருந்து உதவி வழங்கப்படுவார்கள். ‘பிடரிகளை விடுவித்தல்’ என்பது அடிமைகளை விடுதலை செய்வதைக் குறிக்கும்.

இந்தக் காலத்தில் அடிமைகள் இல்லை. ஆதலால் சிறையில் வாடும் கைதிகளின் விடுதலைக்காகவும் அவர்களின் வழக்குச் செலவுகளுக்காகவும் மறுவாழ்வுக்காகவும் ஜகாத் நிதியைப் பயன்படுத்தலாம் என்று அறிஞர் பெருமக்கள் கூறுகிறார்கள். “இறைவழி” எனும் சொல் பொதுவானதாகும். இறைவனின் உவப்பைப் பெற்றுத்தரும் எல்லா வகை நற்செயல்களையும் இது குறிக்கும்.

ஒரு பயணி தனது ஊரில் வசதி படைத்தவனாக இருந்தாலும் சரி, பயணத்தில் இருக்கும்போது அவனுக்கு திடீரென்று உதவிகள் தேவைப்பட்டால் ஜகாத்நிதியிலிருந்து உதவிகள் வழங்கப்படும். “இறைவனுடைய வழியில் தங்கள் பொருள்களைச் செலவு செய்வோரின் செலவுக்கு உவமானம், ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றதாகும். அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன. ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு இறைவன் தான் நாடுவோர்க்கு (அவர்களின் நற்செயல்களின் பயன்களை) பன்மடங்காக்குகிறான்.

– சிராஜுல்ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

மேலும், இறைவன் அதிகமதிகம் வழங்குபவனும் யாவற்றையும் நன்கு அறிந்தவனுமாய் இருக்கிறான்.” (குர்ஆன் 2:261)

The post ஜகாத் – ஏழைகளின் உரிமைப் பங்கு appeared first on Dinakaran.

Tags : Zakat ,Islam ,
× RELATED ஜகாத்