×

அமாவாசை நாளில் பரிகார பூஜை நடத்தி பெண்ணை பலாத்காரம் செய்த பூசாரிக்கு 10 ஆண்டு சிறை: கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

கோவை: கோவை பீளமேட்டை சேர்ந்தவர் 37 வயது பெண். திருமணமாகவில்லை. 8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு மனநலம் பாதித்த தனது 2 சகோதரர்களை பெற்றோருடன் கவனித்து வந்தார். இந்த நிலையில் பெண்ணின் அண்ணன் இறந்து விட்டார். தம்பியின் மனநல பாதிப்புக்கு பரிகார பூஜை செய்வதற்காக திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்த பூசாரி பாபு (40) என்பவரை அந்த பெண் அணுகினார். அதன்படி பாபு கடந்த 2021ம் ஆண்டு பெண்ணின் வீட்டிற்கு வந்து பரிகார பூஜை நடத்தி பெண்ணின் தம்பி கையில் தாயத்து கட்டினார்.

பின்னர் கடந்த 12.3.21ல் பூசாரி பாபு, அமாவாசை தினத்தில் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து பரிகார பூஜை செய்தார். அப்போது பெண்ணின் பெற்றோரை அறையிலிருந்து வெளியேறும்படி கூறிவிட்டு, தனியாக இருந்த பெண்ணிடம் தன்னுடன் உறவு வைத்தால்தான் தோஷம் விலகும் என கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் இறந்து விடுவாய் என்று மிரட்டி, கற்பூரம் ஏற்றி சத்தியமும் வாங்கியுள்ளார்.

இதன் பின்னர் மகளின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்டு பெற்றோர் விசாரித்தபோது, பரிகார பூஜையின்போது பூசாரி பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்த விவரங்களை தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், இதுகுறித்து கோவை கிழக்குப்பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிந்து பூசாரி பாபுவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி நந்தினிதேவி விசாரித்து, பூசாரி பாபுவிற்கு 10 ஆண்டு சிறையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

The post அமாவாசை நாளில் பரிகார பூஜை நடத்தி பெண்ணை பலாத்காரம் செய்த பூசாரிக்கு 10 ஆண்டு சிறை: கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : new moon day ,Coimbatore Mahila ,Coimbatore ,Beelamet, Coimbatore ,Amavasi ,Coimbatore Mahila Court ,
× RELATED மேல்மலையனூருக்கு இன்று 100 சிறப்பு...