×

பட்டா இருந்தாலும் ரத்து செய்துவிட்டு பொத்துமரத்து ஊருணியில் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்-மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சங்கரன், பொறியாளர் சாகுல்ஹமீது, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

கவுன்சிலர் ஞானசேகரன்(திமுக): பொத்துமரத்து ஊரணியின் நடுப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு செய்தது பெரிய ஆளாக இருந்தாலும் சரி, சின்ன ஆளாக இருந்தாலும் சரி தயவு தாட்சினை பாராமல் அகற்ற வேண்டும். பட்டா இருந்தாலும் அதனை மாமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ரத்து செய்ய வேண்டும்.

கவுன்சிலர் ஜெயராணி (திமுக): எங்கள் வார்டில் பல இடங்களில் ரோடுக்காக தோண்டப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. வாறுகால் கட்டுவதற்கு தோண்டப்பட்டு பணிகள் விரைவாக நடைபெறாததால் கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் ரேணுநித்திலா(திமுக): உழவர் சந்தை பின்புறம் உள்ள பகுதிகளுக்கு வாறுகால்வசதி செய்து கொடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி.
கவுன்சிலர் தங்கப்பாண்டிச்செல்வி: 44வது வார்டு வரைபடம் கேட்டு மாநகராட்சி நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை. குப்பை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் திட்டமிட்டு செயல்படுவதில்லை. இதனால் நேரமும் பணமும் விரயமாகி வருகிறது. அதிகாரிகள் குப்பை அகற்றும் பணிகளை சரிவர கண்காணிப்பதில்லை.

மேயர் சங்கீத இன்பம்: அடுத்த மாதம் முதல் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் மூலம் குப்பை அகற்றும் பணி நடைபெற உள்ளது. இனிமேல் மாநகராட்சி பகுதியில் முறையாக குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

கவுன்சிலர் குருசாமி(திமுக): 1வது மண்டலத்தில் உள்ள 12 வார்டுகளில் மக்கள் வசதி பெறும் வகையில் வரி வசூல் மையம் ஏற்படுத்தி தர வேண்டும். ரிப்பேராக உள்ள குப்பை அகற்றும் பேட்டரி வாகனங்களை சரி செய்ய வேண்டும்.

கவுன்சிலர் சரவணன்(திமுக): திருத்தங்கல் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்து 30 நாட்கள் ஆகிறது. மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கவுன்சிலர் ரவிசங்கர் (காங்): வெம்பகோட்டை அணைப்பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் அணையில் அதிகம் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சனையும் பெருமளவு குறையும்.

மேயர் சங்கீதா இன்பம்: மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கவுன்சிலர் ஞான ரஞ்சித் ராஜா(திமுக): எனது வார்டு பகுதியில் உள்ள தேவராஜ் காலனியில் குடிநீர் சரிவர வருவதில்லை. கடம்பன்குளம் கண்மாய் நீர் தெருக்களில் ேதங்குகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் வெயில்ராஜ்(திமுக): எனது வார்டு பகுதியில் ரோடு அமைக்கும் பணி நடைபெறுவதால், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் செய்ய முடியவில்லை. ரோடு போடும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

The post பட்டா இருந்தாலும் ரத்து செய்துவிட்டு பொத்துமரத்து ஊருணியில் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்-மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Shivakasi Corporation Meeting ,Mayor ,Sangeeta Pleasant ,Vice Mayor ,Wickneshriya Kallirajan ,Dinakaran ,
× RELATED சிவகாசி அருகே சரவெடி பதுக்கிய குடோனுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை