×

வாலாங்குளம் கரைப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும்

*தமிழ்நாடு மின் நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் உத்தரவு

கோவை : கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் வாலாங்குளம் பகுதியில் ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் அம்பலவாணன், கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். வாலாங்குளம் கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி நடந்து வருவதை பார்வையிட்ட தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் அம்பலவாணன், வாலாங்குளத்தில் கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தவிர்க்கும் வகையில் கட்டுமான பணியினை மேற்கொள்ள வேண்டும். இப்பணியை விரைவாக முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டார்.

இதன்பின்னர், கோவை அரசு மருத்துவமனை எதிரில் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஆய்வு செய்த தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் அம்பலவாணன், நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி பேருந்து நிறுத்தம் மேற்கூரை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என பாராட்டு தெரிவித்தார். வாலாங்குளம் கரையில் வின்சென்ட் சாலையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டார். பயனுள்ள மரக்கன்றுகளை நடவுசெய்யும்படி கேட்டுக்கொண்டார்.

கோவை உக்கடம் பெரியகுளத்தில் ‘’ஐ லவ்யூ கோவை’’ என்ற அடையாளம், பொதுமக்கள் அமரும் இருக்கை, மின் விளக்குகள் போன்றவற்றை பார்வையிட்ட அவர், பணிகள் சிறப்பாக மெற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். மேலும், அங்கு வாகனங்களின் பயனற்ற உதரி பாகங்களை கொண்டு மறுசுழற்சி முறையில் மாதிரி கார், கிராமபோன் போன்ற மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதையும் பார்வையிட்டார். குறிச்சி குளக்கரையில் நடந்து வரும் திருவள்ளுவர் சிலை, ஜல்லிக்கட்டு காளை சிலை, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு பொதுமேலாளர் முருகன், மாநகர பொறியாளர் இளங்கோவன், ஸ்மார்ட்சிட்டி மேலாளர் பாஸ்கர், உதவி பொறியாளர்கள் சரவணக்குமார், கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post வாலாங்குளம் கரைப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Walangkulam ,Tamil Nadu Electrical Finance and Infrastructure Development Corporation ,President ,Goa Municipal Corporation ,Dinakaran ,
× RELATED ஈரான் அதிபர் ரைசியின் உடல் இன்று அடக்கம்