×

திருமலையில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து

*விரைவில் புதிய நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது

திருமலை : திருமலையில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் முன்னறிவிப்பின்றி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, புதிய நிறுவனத்திற்கு விரைவில் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சுலபா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்தம் வழங்கப்பட்டு திருமலை முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த தனியார் நிறுவனத்தின் மூலம் 3,000 மேற்பட்ட ஊழியர்கள் தேவஸ்தானத்தில் பல ஆண்டுகளாக தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 3 தினங்களாக தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களை தேவஸ்தானத்தின் கீழ் அல்லது மாநில அரசின் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான கார்ப்ரேஷனில் இணைக்க வேண்டும் என வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணி புரியும் தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி திருமலையில் உள்ள ஸ்ரீவாரி சேவா சதனில் மாவட்ட நிர்வாகம், அனைத்துத் துறைத் தலைவர்கள், ஊழியர்கள் தொழிற்சங்கத் தலைவர்களுடன் மாற்று ஏற்பாடுகள் குறித்து செயல் அதிகாரி தர்மா ஆய்வு செய்தார்.

இதில் தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து துறை அலுவலர்கள், ரெகுலர் மற்றும் அவுட்சோர்சிங் பணியாளர்கள் அனைவரும் இதை ஒரு போராக கருதி இதில் அனைவரும் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.அப்போது அவர் பேசியதாவது: திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வழங்கும் அனைத்து சேவைகளிலும் தூய்மை முக்கியம். தேவஸ்தானத்தில் 8 ஆயிரம் ரெகுலர் மற்றும் 4 ஆயிரம் ஒப்பந்த கார்ப்ரேஷன் ஊழியர்கள் உள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிப்பது அனைவரின் பொறுப்பு. எனவே அனைத்து ஊழியர்களும் துறைத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் துறை வாரியாக தூய்மை பணிகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ஆர்வமுள்ள ஸ்ரீவாரி சேவகர்களை தூய்மை பணிகளைச் செய்ய அழைக்குமாறும் பிஆர்ஓவுக்கு உத்தரவிட்டார். 25 நாட்களுக்கு துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதன்பிறகு புதிய நிறுவனம் தேர்தெடுக்கப்பட்டு தூய்மை பணிகள் ஒப்படைக்கப்படும். மகாத்மா காந்தியை முன்மாதிரியாகக் கொண்டு ஊழியர்கள் சுகாதாரப் பணிகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

கலெக்டர் வெங்கடரமணா பேசியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் என்பது உலகம் முழுவதும் உள்ள பக்தர்களின் நம்பிக்கையைப் பெற்ற ஆன்மீக அமைப்பாகும். இந்த நிறுவனத்தில் எதிர்காலத்தில் வேலைநிறுத்தம் ஏற்படாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த 3 நாட்களுக்கு திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் இருந்து பணியாளர்கள் துப்புரவு பணிக்காக அழைத்து வரப்படுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றார்.

திருப்பதி எஸ்பி பரமேஷ்வர் பேசுகையில், ‘துப்புரவு பணியாளர்களின் போராட்டத்தால் அமைதி மற்றும் பாதுகாப்பு பிரச்னை ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தின் பின்னணியில் சில சக்திகளின் சதி இருப்பதாகவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மாநகராட்சி கமிஷனர் ஹரிதா பேசியதாவது: ஏழுமலையான் கோயில் உள்ள திருமலை சேஷத்திரத்தால் திருப்பதி நகரம் வளர்ச்சியடைந்து வருகிறது. திருப்பதி நகரின் வளர்ச்சிக்கு தேவஸ்தானம் முழு ஆதரவை வழங்கி வருகிறது. துப்புரவு பணியாளர்களின் போராட்டத்தையொட்டி பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து விதமான உதவிகளும் செய்யப்படும்.

துப்புரவு பணியாளர்களின் போராட்டத்தையொட்டி பக்தர்களுக்கு சிரமம் இன்றி முழு ஒத்துழைப்பு அளித்து துப்புரவு பணிகளில் பங்கேற்பதாக பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் உறுதியளித்தனர். இதில் ஜேஇஓக்கள் சதா பார்கவி, வீரபிரம்மம், எஸ்விபிசி சிஇஓ சண்முககுமார், நிதி அலுவலர் பாலாஜி, சட்ட அலுவலர் ரெட்டப்பா, தலைமை பொறியாளர் நாகேஸ்வரராவ் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post திருமலையில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Tirumalay ,Tirumalai ,Dinakaran ,
× RELATED வீட்டை பூட்டி மருமகள் சாவியை...