×

தஞ்சாவூர் அருகே தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வல்லம் : தஞ்சாவூர் அருகே சிவகாமிபுரம் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும். வயல் பகுதியில் சாய்ந்துள்ள மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சாவூர் அருகே சிவகாமிபுரம் வழியாக ஆலக்குடி, வண்ணாரப்பேட்டை, புதுக்கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் பால் வேன், கேஸ் சிலிண்டர் வேன், லாரி உட்பட சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களும் தினமும் நூற்றுக்கணக்கில் சென்று வருகின்றன.

இந்நிலையில் சிவகாமிபுரம் பகுதியில் உள்ள மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டர் மின்கம்பியில் உரசியதால் தீப்பற்றி எரிந்து வைக்கோல் கட்டுகள் முழுமையாக சேதமானது.திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் போன்ற பகுதிகளில் இருந்து இந்த சாலை வழியாக தஞ்சைக்கு லோடு வேன்கள், லாரிகள் அடிக்கடி சென்று வருகின்றன. ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டால் விவசாய பணிகளும் மும்முரம் அடைந்து விடும்.

அதனால் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். மேலும் இப்பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு அருகிலேயே மிகவும் தாழ்வாக மின் கம்பிகள் செல்கின்றன. மேலும் இந்த சாலை வழியாக தஞ்சைக்கு செல்லும் பகுதியில் வயல் பகுதியில் ஊன்றப்பட்டுள்ள மின் கம்பங்களும் சாய்ந்த நிலையில் உள்ளன.எனவே காலம் தாழ்த்தாமல் இவற்றை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தஞ்சாவூர் அருகே தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Vallam ,Sivakamipuram ,
× RELATED வல்லம் பேரூராட்சியில் சட்டத்திற்கு...