×

கொல்லிமலையில் மிளகு விளைச்சல் பாதிப்பு-கிலோ ₹480க்கு கொள்முதல்

சேந்தமங்கலம் : கொல்லிமலையில் நோய் தாக்கத்தால் மிளகு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளில், மலைவாழ் மக்கள் மிளகு, காபி, ஏலக்காய், அன்னாசி, வாழை, ஆரஞ்சு கொய்யா உள்ளிட்டவற்றை ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர். இதில் பிரதான பயிராக மிளகு உள்ளது. சில்வர் ஓக் மரக்கன்றுகள் நடப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, அதில் மிளகு கொடி ஏற்றி விடப்படுகிறது. மூன்றாண்டுகளில் மிளகு கொடியில் பூ வைத்து, காய்க்க தொடங்கும். ஆறு ஆண்டுகளில் மகசூல் வர தொடங்கி விடும். கொல்லிமலையில் விளையும் மிளகு, அதிக காரத்தன்மை கொண்டதால், தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் மிளகை, வியாபாரிகள் விலை கொடுத்து வாங்கி, அதனை தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். தற்போது, கொல்லிமலை முழுவதும் மிளகு அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு கொல்லிமலையில் அதிக மழை, கடும் பனிப்பொழிவு காரணமாக, மிளகு கொடிகளில் நோய் தாக்கியதால், மகசூல் பாதித்து, தரமும் குறைந்து விட்டது. கடந்தாண்டு விவசாயிகளிடமிருந்து கிலோ ₹600க்கு வாங்கப்பட்ட மிளகு, இந்த ஆண்டு ₹480க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கடைகளில் ₹560க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post கொல்லிமலையில் மிளகு விளைச்சல் பாதிப்பு-கிலோ ₹480க்கு கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Kolimalaya ,Chendamangalam ,Kollimalaya ,Kolimalayan Union ,Kolimalayan ,Dinakaran ,
× RELATED கொல்லிமலையில் பரபரப்பு சம்பவம் அருவி...