×

கேரளத்தின் காஷ்மீர்; ஆப்பிள் விளையும் கிராமம் காந்தலூரில் களை கட்டிய கோடை விழா-சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்

உடுமலை : கேரளத்தின் காஷ்மீர் என அழைக்கப்படும் உடுமலையில் இருந்து 60 கிமீ தூரத்தில் உள்ள இயற்கை எழில் மிக்க காந்தலூர் மலைக்கிராமத்தில் கோடை விழா களைகட்டியது. இதனை முன்னிட்டு நடந்த கலை விழா, ஆடல் பாடல், உணவு திருவிழா, பராம்பரிய நடன நிகழ்ச்சி, இன்னிசை கச்சேரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணார் செல்லும் வழியில் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள அழகிய மலைக்கிராமம் தான் காந்தலூர். கேரள மாநில அரசு மூலம் அண்மையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அணைக்கட்டுகள், அருவிகள், ஆற்றங்கரை, மலைகள், வனங்கள், பள்ளத்தாக்கு, சிகரம், மலை வாசஸ்தலங்கள் போன்றவற்றில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது.

மேலும் அப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை தரம் உயர வழிவகைகளை கேரள மாநில அரசு செய்து வருகிறது. அந்த வகையில் இடுக்கி மாவட்டம் மறையூர் அருகே உள்ள காந்தலூர் ஊராட்சியில் கோடைவிழா கொண்டாட்டத்தை அறிவித்தது. இதனை முன்னிட்டு மலர் காட்சி, மெட்ரோ, உணவு திருவிழா, பராம்பரிய நடன நிகழ்ச்சி, இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடத்தப்படுகிறது.

இந்நிலையில், கோடை விடுமுறை துவங்கி விட்ட சூழலில் குடும்பத்தோடு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ள பலருக்கும் காந்தலூர் சுற்றுலா ஒரு அட்வெஞ்சர், த்ரில், மறக்க முடியாத, மகிழ்ச்சிகரமான சுற்றுலாவாக அமையும். உடுமலையில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ள காந்தலூர் கேரளத்தின் காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது.காஷ்மீருக்கு அடுத்த படியாக காந்தலூரில் தான் ஆப்பிள் விளைகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலை காரணமாக ஆரஞ்சு, பேரிக்காய், பிளம்ஸ், பீச், சப்போட்டா, பட்டர் புரூட்ஸ், முட்டைப்பழம், மௌஷாம்பி, கொய்யா, சீதா, பட்டர் புரூட், மரநெல்லி, அன்னாசி என ஏராளமான பழமரங்கள் விளைகிறது.

உடுமலையில் இருந்து 9/6 செக்போஸ்ட் வழியாக சின்னாறு சோதனை சாவடியை கடந்து காந்தலூரை அடையலாம். சொந்த வாகனம், வாடகை வாகனம் (ஜீப்), மூணார் செல்லும் கேரள அரசு பேருந்திலும் பயணித்து கேரளாவின் காஷ்மீரை காணலாம். மலை முகடு, கிடுகிடு பள்ளத்தாக்கு, ஆறுகள், அருவி,காட்சி முனைகள் என இயற்கை அழகு இங்கு கொட்டிக்கிடக்கும். சின்னாறு செக்போஸ்ட் முன்பு அடர்ந்த காட்டுப்பகுதியில் கொட்டும் தூவானம் காட்டுருவியை வனத்துறை கைடு உதவியுடன் கண்டு மகிழலாம்.

மேலும் முருகன் பாறா காட்சி முனை, அஞ்சி நாடு வியூ பாயிண்ட், லெமன் கிராஸ் காட்சிமுனை அசத்தலாக இருக்கும். ப்ரூட் கார்டனில் பழங்கள் மட்டுமின்றி வண்ண வண்ண மலர்களும், கத்தரி, கேரட், கோஸ், பீட்ரூட், பீன்ஸ், மோரைக்காய், முள்ளங்கி, காலிபிளவர், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளும் ஆர்கானிக் முறையில் விளைவித்து விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய இயற்கை எழில் மிக்க காந்தலூர் சுற்றுலா பயணிகள் கொண்டாடும் கோடை வாசஸ் தலமாக திகழ்கிறது என்பதே உண்மை.

மனதை மயக்கும் ஜீப் சவாரி

காந்தலூரில் அமைந்துள்ள வாட்டர் பால்ஸ் இதயத்தை கொள்ளை கொள்கிறது. ஒத்தமலைக்கு ஜீப்பில் பயணிப்பது வித்தியாசமான அனுபவத்தை தரும். ஒருபுறம் மலை, மற்றொரு புறம் கிடுகிடு பள்ளத்தாக்கு வனப்பகுதி ஆப் ரோடு சவாரி செம என்கின்றனர், வெளியூர் சுற்றுலா பயணிகள். மேலும் காந்தலூரில் தங்கும் விடுதிகள் உள்ளன. இரண்டு நாள், மூன்று நாள் சுற்றுலாவுக்கு தனித்தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர உணவு, ஜீப் பயணம், டெண்ட் ஸ்டே, பயர் கேம்ப் உள்ளிட்டவற்றிற்கு ஏற்றபடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

The post கேரளத்தின் காஷ்மீர்; ஆப்பிள் விளையும் கிராமம் காந்தலூரில் களை கட்டிய கோடை விழா-சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kashmir, Kerala ,Kashmir ,Apple Village Kandalur ,Udumalayas ,Kerala ,Summer ,of Weed in Apple ,Village Kandalur-Tourists Celebration ,
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!