×

ஜூன் 1ம் தேதி முதல் குன்னூர், கோத்தகிரி அரசு பள்ளிகளில் முதலமைச்சர் காலை உணவு திட்டம்-கலெக்டர் தகவல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குன்னூர், கோத்தகிரி வட்டாரங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஜூன் 1ம் தேதியும், ஊட்டி வட்டாரத்தில் ஜூலை 15ம் தேதியும் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மகளிர் திட்டம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்வது குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஊட்டி கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்து பேசியதாவது: முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 2023-24ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசுத் தொடக்க பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் (ஆதிதிராவிடர் பள்ளிகள் உட்பட) 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது 2 கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

இதில் முதற்கட்டமாக வரும் ஜூன் 1ம் தேதியன்று குன்னூர், கோத்தகிரி வட்டாரங்களிலும், 2ம் கட்டமாக ஜூலை 15ம் ேததியன்று ஊட்டி வட்டாரத்திலும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கென ஊராட்சி, பேரூராட்சி அளவில் முதன்மை குழு ஊராட்சி மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் ஒரு பிரதிநிதி, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பின் அலுவலக நிர்வாகிகளில் ஒருவரை கொண்டு அமைக்கப்படும்.

தலைமையாசிரியர் சமையல் செய்திடும் இடம், வைப்பறை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி, எஸ்எச்ஜி, பிஎல்எப், ஏஎல்எப், தேர்வு சமையலர் தேர்வு, தானிய வங்கி அமைத்து ரொக்கத்தை தவிர்த்து அரிசி, பருப்பு, சிறு தானிய வகைகள், காய்கறிகள், எண்ணைய் போன்றவைகளை நன்கொடையாக பெறுதல், 13 வகையான அங்கீகரிக்கப்பட்ட உணவு வகை முறையாக தயார் செய்து வழங்குவதை உறுதி செய்தல் வேண்டும்.

மேலும் மகளிர் சுய உதவிக்குழு, ஊராட்சி, பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களை தேர்வு செய்திடும் போது குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள உறுப்பினராகவும், அதே பகுதியை சேர்ந்தவராகவும், குறைந்தபட்சம் கல்வி தகுதியாக 10ம் வகுப்பு வரை படித்தவராகவும், சமையல் திறன் கொண்டவராகவும் உறுப்பினர் பெயரில் ஆன்ராய்டு மொபைல் போன் வைத்திருப்பவராகவும், அவரது குழந்தைகள் அதே பள்ளியில் படிப்பவராகவும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற முதன்மை பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். உணவு மற்றும் மளிகை பொருட்கள் நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்தினை நமது மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திட அனைவரும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் பாலகணேஷ், செயற்பொறியாளர் செல்வகுமரன், ஆர்டிஒக்கள் துரைசாமி, முகமது குதுரதுல்லா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சாம்சாந்தகுமார், பேரூாட்சிகள் உதவி இயக்குநர் இப்ராகிம் ஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோல்டி சாராள், மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஜூன் 1ம் தேதி முதல் குன்னூர், கோத்தகிரி அரசு பள்ளிகளில் முதலமைச்சர் காலை உணவு திட்டம்-கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Gunnur ,Gothagiri Government Schools ,Feedi ,Nilgiri ,
× RELATED குன்னூர் பேருந்து விபத்து...