×

தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக சம்பங்கி பயிரிடுவது குறைந்தது-விதை கிழங்கு விற்பனையும் சரிவு

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் பெய்த தொடர்மழை காரணமாக, சம்பங்கி பூ சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. இதனால், விதை கிழங்கு விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூக்கள் பயிரிடப்படுகின்றன. கோயில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு தயாரிக்கப்படும் மாலைகளில் முக்கிய இடம் பெறுவதால், சம்பங்கி பூவிற்கு எப்போதும் கிராக்கி அதிகம்.

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, செட்டிக்கரை, நீலாபுரம், கெங்கன்கொட்டாய், சவுக்குதோப்பு, கிருஷ்ணாபுரம், செம்மாண்டகுப்பம், நாய்க்கன்கொட்டாய், அரியகுளம், கம்பைநல்லூர், இண்டூர், பென்னாகரம், அதகபாடி, காரிமங்கலம், பெரியாம்பட்டி ஆகிய பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதும் மகசூல் கிடைப்பதால், விவசாயிகள் சம்பங்கி பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தர்மபுரி அருகே முத்துக்கவுண்டன்கொட்டாய் பகுதியில், சம்பங்கி பூ கிழங்குகள் தரம் பிரிக்கும் பணியில், சுமார் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு தரம்பிரிக்கப்படும் சம்பங்கி பூ கிழங்குகள், கிலோ ₹25 வரை விற்பனை செய்யப்படுகிறது. நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால், சம்பங்கி சாகுபடி பரப்பு குறைந்தது. இதனால் சம்பங்கி கிழங்கு விற்பனையும் டல் அடித்துள்ளது. இது குறித்து சம்பங்கியை தரம் பிரிக்கும் விவசாயி ராஜமாணிக்கம் கூறுகையில், ‘காவேரிப்பட்டணம், தர்மபுரியின் பிற பகுதிகளில் உள்ள தோட்டங்களில் இருந்து சம்பங்கி கிழங்குகளை வாங்கி வந்து, தரம் பிரிக்கிறோம்.

தற்போது ₹25க்கு தான் விற்பனையாகிறது. ஆண்டுக்கு 10 டன் வரை வியாபாரம் ஆனது. விதைகளில் மண்ணை அகற்றி தரம் பிரிக்க, ஒரு நாள் கூலியாக ஆணுக்கு ₹600, பெண்ணுக்கு ₹300 கொடுக்க வேண்டும். மழை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால், மாவட்டம் முழுவதும் சம்பங்கி நடவு செய்த விவசாயிகள், தங்களது நிலத்தில் கரும்பு, நெல் போன்றவற்றை பயிரிட ஆரம்பித்து விட்டனர். இதனால் சம்பங்கி பயிரிடும் பரப்பு குறைந்து, இதுவரை 50 கிலோ விதைகளை கூட யாரும் வாங்க வரவில்லை,’ என்றார்.

சம்பங்கி விதை வாங்க வந்த எம்.ஒட்டப்பட்டியை சேர்ந்த விவசாயி துரை கூறுகையில், ‘எனது தோட்டத்தில் சம்பங்கி பயிரிட்டுள்ளேன். நடப்பாண்டில் நல்லமழை பெய்ததால், சம்பங்கியின் வேரில் தண்ணீர் தேங்கி, வேர் அழுகல் ஏற்பட்டு விட்டது. சம்பங்கி வெயில் காலத்திற்கு மட்டுமே விளைச்சல் தரும். கூலி ஆட்கள் பற்றாக்குறையால் குறைந்த அளவே சம்பங்கி பயிரிடுகிறேன். தினமும் எனது மனைவியும் பூ பறிக்கிறோம். இதன் மூலம் தினசரி வருவாய் ₹200 கிடைக்கிறது. மழை இல்லாமல் இருந்தால் மட்டுமே, சம்பங்கி நல்ல விளைச்சல் தரும்,’ என்றார்.

The post தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக சம்பங்கி பயிரிடுவது குறைந்தது-விதை கிழங்கு விற்பனையும் சரிவு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri district ,Dharmapuri ,Sambangi ,Chambangi ,Dinakaran ,
× RELATED 2 குழந்தைகளுடன் இளம்பெண் மர்ம சாவு விஷம் குடித்த கணவனும் உயிரிழப்பு