×

வேதாரண்யம் பகுதியில் சணல் சாகுபடி அமோக விளைச்சல்-மகிழ்ச்சியில் விவசாயிகள்

வேதாரண்யம் : நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம், மருதூர், வாய்மேடு, கருப்பம்புலம், கரியாப்பட்டினம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா அறுவடை முடிந்த உடன் வயலில் இருக்கும் ஈரப்பதத்தை கொண்டு சணல் பயிர் விதைக்கப்பட்டு உள்ளது. 3 மாதத்தில் அறுவடைக்கு வரும். இந்த சணல் சாகுபடி தற்போது பூத்து காணப்படுகிறது.

சணல்பயிர் மஞ்சள் பூ பூத்து பார்ப்பதற்கு மஞ்சள் கம்பளம் விரித்தது போல், மிக அழகாக காணப்படுகிறது.சணல் பயிர் இயற்கை பசுந்தாள் உரமாக வயல்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் களைகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட சணல் பயிர் தற்போது பூத்துள்ளது.இந்த சணல் சாகுபடி இன்னும் ஒரிரு மாதத்தில் காய்த்து முற்றிய நிலையில் இதனை வயல்களில் வைத்து விவசாயிகள் உழுது விடுவார்கள். அப்படி செய்வது மூலம் பசுந்தாள் உரமாக மாறிவிடுகிறது.

சணல் பயிருக்கு அதிக செலவு இல்லாமலும், இயற்கை பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது. ஒரு சில விவசாயிகள் முற்றிய சணல் விதையை அறுவடை செய்து ஒரு கிலோ 100 ரூபாய் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இயற்கை உரமாகவும், செலவு இல்லமால் சம்பா சாகுபடிக்கு பின்பு கூடுதல் வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வமுடன் இப்பகுதியில் சணல்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

ஓர் ஏக்கர் சாகுபடி செய்தால் சுமார் 250 கிலோ விலை கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். அறுவடைக்கு பின் சணல் விதைகளை மறு ஆண்டு வயலில் விதைப்பதற்காக விதைகளை சில விவசாயிகள் எடுத்து வைக்கின்றனர். நீர், உரம் இன்றி நன்றாக சணல் பயிர் இந்த மண்ணில் விளைந்து விவசாயிகளுக்கு அதிக லாபமாகவும், மண்ணுக்கு பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்துவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post வேதாரண்யம் பகுதியில் சணல் சாகுபடி அமோக விளைச்சல்-மகிழ்ச்சியில் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Amoka ,Vedaranyam ,Nagai District ,Vitaranism ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் அருகே பழமை வாய்ந்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்