×

கர்நாடக மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துவதா? விழா அமைப்பாளர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்!!!

சென்னை : கர்நாடகத்தில் தமிழ் வாக்காளர்கள் மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துவதா? விழா அமைப்பாளர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்து குறிப்பில்,

“கர்நாடக மாநிலம் சிவமோகாவில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற தமிழ் வாக்காளர்கள் மாநாட்டின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது, அதை அம்மாநில பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஈஸ்வரப்பா குறுக்கிட்டு பாதியில் நிறுத்தச் செய்ததுடன், அதற்கு மாற்றாக கன்னடமொழி வாழ்த்தை இசைக்கச் செய்திருக்கிறார். அவரது அப்பட்டமான மொழிவெறி கண்டிக்கத்தக்கது!

கர்நாடகத்தில் நிகழ்ச்சி நடந்தாலும் அதில் பங்கேற்றவர்கள் அனைவரும் தமிழர்கள். தமிழ் வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டும் நோக்குடன் தான் அந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அத்தகைய மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கச் செய்யப்படுவது தான் முறையாகும். கன்னடமொழிவெறியராக அறியப்பட்ட ஈஸ்வரப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லையென்றாலும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்த வேண்டியது அவரது கடமை. ஆனால், மேடை நாகரிகம் கூட இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியதன் மூலம் தமிழ்த்தாயை இழிவுபடுத்தியுள்ளார்.

மாநாட்டில் பங்கேற்றவர்களில் எவருக்கும் கன்னடமொழி வாழ்த்து தெரியவில்லை. அதை அவர்களே வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். ஆனாலும், அவர்கள் மீது கன்னடமொழி வாழ்த்து திணிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்மொழியை தாழ்த்தியும், கன்னடமொழியை உயர்த்தியும் ஈஸ்வரப்பாவும், பிற அமைப்பாளர்களும் நடந்து கொண்டது பெரும்தவறு. அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இத்தகைய மொழிவெறிச்செயலை அந்த மேடையில் இருந்த தமிழர்கள் எவரும் தட்டிக் கேட்காதது வருத்தம் அளிக்கிறது!

கன்னடமொழிக்கும் தாய் தமிழ்மொழி தான். கன்னடத்திற்காக தமிழை இழிவுபடுத்துவது தாய்க்கும் தாயை இழிவுபடுத்துவதற்கு சமமானது ஆகும். மொழிவெறி சிந்திக்கும் திறனை செயலிழக்கச் செய்துவிடும் என்பதற்கு தமிழ் வாக்காளர்கள் மாநாட்டில் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் நடந்து கொண்ட விதம் தான் எடுத்துக்காட்டு ஆகும்.

மொழிகள் தாயினும் மேலானவை. அதனால் தான் “உன் தாயை பழித்தவனை தாய் தடுத்தால் விட்டுவிடு, தமிழை பழித்தவனை உன் தாய் தடுத்தாலும் விடாதே” என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பொங்கினார். ’’அனைவருக்கும் அவரவர் தாய்மொழி உயர்ந்தது. உங்கள் மொழி மீது பற்றும், மரியாதையும் காட்டுங்கள்… பிறமொழிகளை இழிவுபடுத்தாதீர்கள். அது வேறு விளைவுகளை ஏற்படுத்தி விடும்” என்பதை ஈஸ்வரப்பா போன்ற கன்னடமொழி வெறியர்களுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்,”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கர்நாடக மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துவதா? விழா அமைப்பாளர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்!!! appeared first on Dinakaran.

Tags : in Karnataka ,Bamaga ,Ramadoss ,CHENNAI ,of Tamil Thai greetings in Tamil Voters Conference ,Karnataka ,Denigration of Tamil Thai greetings in Karnataka ,
× RELATED சென்னை மாநகரில் பால் தட்டுப்பாட்டை...