×

பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம்…தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்புக்கு வைரமுத்து கண்டனம்

சென்னை :கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டபேரவை தேர்தலில் தமிழர்களின் ஆதரவு பெறும் வகையில் ஷிவமொக்கா மாநகரில் நேற்று அம்மாவட்டத்தில் வாழும் தமிழர்களை ஓரிடத்தில் அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கர்நாடக முன்னாள் துணைமுதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, தமிழ்நாடு பாஜ தலைவர் கே.அண்ணாமலை உள்பட கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களை சேர்ந்த பாஜ தலைவர்கள் இருந்தனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன் கர்நாடக மாநில நாட்டுப்பண் இசைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசின் மாநில மொழி பாடலான நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்’’ என்ற பாடல் ஒலிப்பரப்பானது. உடனடியாக பாடலை நிறுத்தும்படி கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார். அதன் பின் கர்நாடக மாநில மொழி பாடல் இசைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு எந்த சலனமும் இல்லாமல் பா,ஜ தமிழ்நாடு பிரிவு தலைவரான அண்ணாமலை அமைதிகாத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அண்ணாமலைக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அந்தவகையில் கவிஞர் வைரமுத்துவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

“கர்நாடகா மேடையில்
தமிழ்த்தாய் வாழ்த்து
பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு
இடிவிழுந்த மண்குடமாய்
இதயம் நொறுங்கியது

ஒலிபரப்பாமல்
இருந்திருக்கலாம்;
பாதியில் நிறுத்தியது
ஆதிமொழிக்கு அவமானம்

கன்னடத்துக்குள்
தமிழும் இருக்கிறது;
திராவிடத்திற்குள்
கன்னடமும் இருக்கிறது

மறக்க வேண்டாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

The post பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம்…தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்புக்கு வைரமுத்து கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Adi Mozhi ,Vairamuthu ,Chennai ,Poet Vairamuthu ,Karnataka ,Tamils ,assembly ,Adhimozhi ,
× RELATED ஒரு யுக மாற்றத்திற்கு தமிழர்கள் தயாராக வேண்டும்: கவிஞர் வைரமுத்து