சென்னை : டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து பேசுகிறார்.கிண்டியில் கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கை வசதிகளுடன் ரூ.230 கோடி செலவில் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை கட்டிடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களை கொண்டுள்ளது. இம்மருத்துவமனையில் இதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, ரத்தநாள அறுவை சிகிச்சை துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை, சிறுநீரக அறுவை சிகிச்சை துறை போன்ற உயர்சிறப்பு பிரிவுகளை கொண்டுள்ளது.
இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி சென்னை கிண்டி, பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க நேரில் அழைப்பு விடுக்கிறார். மேலும் , சில ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தமிழக அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களுக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தவும் முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 7 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால் அவர் டெல்லி செல்ல இருந்த விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இரவு 9.30 மணி ஆன பிறகும் தொழில் நுட்ப கோளாறு சீர் செய்யப்படவிலை. இதையடுத்து முதல்வர் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு வீடு திரும்பினார். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6 மணியளவில் விமானம் மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.
The post குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

