×

வங்கி அபராதம் செலுத்த தேனி கோர்ட் உத்தரவு

 

தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் குடியிருப்பவர் வேல்முருகன் மனைவி மதுபாலா. இவர் போடியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம்மில் ரூ.10 ஆயிரம் எடுத்தார். அப்போது பணம் வராமல் பணம் எடுத்ததாக சீட்டு மட்டும் வந்தது. இதுகுறித்து சிண்டிகேட் வங்கியில் முறையிட்டபோது வங்கி நிர்வாகம் முறையாக பதிலளிக்கவில்லை. இதனையடுத்து, மதுபாலா பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பின்னும், வங்கி நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை.

இதனையடுத்து, மதுபாலா, தேனி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் வழக்கு தாக்கல் செய்தார். மதுபாலாவுக்கு ஆதரவாக வக்கீல் பாண்டியன் ஆஜரானார். இவ்வழக்கு தாக்கல் செய்த 51 நாட்களில் வங்கி நிர்வாகம் தானாகவே மதுபாலா வங்கிக்கணக்கில் ரூ.10 ஆயிரத்தை வரவு வைத்தது. இருந்தபோதிலும், வங்கி சேவை குறைபாடு மற்றும் மனஉளைச்சல் சம்பந்தமாக வழக்கு நீதிபதி சுந்தர், நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி உறுப்பினர்கள் அசினா, ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்தது. இதில் வழக்கு தாக்கல் செய்த நாள் முதலாக வங்கி நிர்வாகம் ஆசிரியை மதுபாலாவுக்கு ரூ.10 ஆயிரத்தை கணக்கில் கொண்டு 12 சதவீத வட்டியை ஒரு மாத காலத்திற்குள் தர வேண்டும். சேவைக் குறைபாட்டுக்காக ரூ.10 ஆயிரம் தர வேண்டும், மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.20 ஆயிரம் தரவேண்டும் என அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.

The post வங்கி அபராதம் செலுத்த தேனி கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Theni Court ,Theni ,Velmurugan ,Madhubala ,Palanisettipatti ,Bodi ,Dinakaran ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு