×

அம்பையில் சாலை விரிவாக்க பணிக்காக பழமையான நதியுண்ணி கால்வாய் பாலம் இடிப்பு

அம்பை,ஏப்.28: அம்பாசமுத்திரத்தில் பழமையான நதியுண்ணி கால்வாய் பாலம் இடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் முதல் பாபநாசம் வரையிலான சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக அம்பை கிருஷ்ணன் கோயில் அருகில் நதியுண்ணிக் கால்வாயில் கட்டப்பட்டுள்ள பாலமும், தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளியின் அருகில் 2 சிறிய பாலங்களும் நேற்று மதியம் 2 மணிக்கு ராட்சத பொக்லைன் இயந்திரத்தை கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. எனவே அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

குறிப்பாக, இலகு ரக வாகனங்கள் செல்லவும், அரசு பேருந்துகள் செல்லவும் தனித்தனியாக பாதை அமைக்கப்பட்டது. ஆனாலும் முதல்நாளில் குளறுபடி காரணமாக நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதை தொடர்ந்து போலீசார் வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசலில் அப்பகுதி சிக்கி தவித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைய 2 மாதங்கள் ஆகும் என்பதால் அதுவரை இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு முறையான ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக அம்பை கிருஷ்ணன் கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே அம்பை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாலம் இடிக்கப்பட்டு உள்ளதால் அவ்வழியாக சென்ற குடிநீர் குழாய்களும் அகற்றப்பட்டுள்ளது, எனவே அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்வது தடைபட்டு உள்ளதால் பொதுமக்கள் பணிமுடியும் வரை ஏற்படும் அசவுகரியங்களை பொறுத்து கொள்ள வேண்டும். பணி முடியும் வரை குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுழற்சி முறையில் வாகனங்களில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நகர்மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

The post அம்பையில் சாலை விரிவாக்க பணிக்காக பழமையான நதியுண்ணி கால்வாய் பாலம் இடிப்பு appeared first on Dinakaran.

Tags : Nadiunni canal ,Ambai ,Nadiyunni canal bridge ,Ambasamutra ,Nellai… ,Nadiyunni ,Dinakaran ,
× RELATED தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: மணிமுத்தாறு அருவியில் குளிக்கத்தடை