×

ரிங் ரோடு, மெட்ரோ ரயில், டெர்மினல் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்டவைகளுடன் ₹7,345 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம்

சேலம், ஏப்.28: சேலம் மாநகரில் ₹7,345 கோடியில் ஒருங்கிணைந்த எளிமையான போக்குவரத்து திட்டம் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், ரிங்ரோடு, மெட்ரோ ரயில், டெர்மினல் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 5வது பெரிய மாநகராட்சியாக சேலம் உள்ளது. சேலம் மாநகராட்சி 91.36 சதுர கி.மீட்டர் பரப்பளவில் 9.36 லட்சம் மக்கள் தொகையினை கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், அனைத்து மாநிலங்களை இணைக்கும் முக்கிய நகரமாக சேலம் திகழ்கிறது. மாநகர் பகுதியில் அமைந்துள்ள 1037.17 கி.மீட்டர் நீளம் கொண்ட மொத்த சாலைகள் மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ளது.

சேலம் ஒரு தொன்மை வாய்ந்த நகரமாகவும், கதர், பட்டு, வெள்ளி கொலுசு மற்றும் இரும்பு போன்ற தொழில் துறைகளில் முன்னோடியாக விளங்குகிறது. கோடை வாசஸ்தலமான ஏற்காடு(ஏழைகளின் ஊட்டி) மற்றும் மேட்டூர்அணை ஆகியவை சிறந்த சுற்றுலா தளமாக உள்ளது. மேட்டூர், ஈரோடு, ஆத்தூர், தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மைய பகுதியாக அமைந்துள்ளதால் வெளியூர் மக்கள் அதிகமான வாகனங்கள் மூலம் தினசரி பயணிப்பதாலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநகரமாக உள்ளது.

வாகன போக்குவரத்து மட்டுமின்றி பாதசாரிகள் நடக்க போதிய நடைபாதைகள் இல்லாமல் உள்ளது. இதனால், சேலம் மாநகராட்சி பகுதியில் ஒருங்கிணைந்த எளிமையான போக்குவரத்திற்காக 2021-22ம் ஆண்டுதமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதி நிறுவனம் மூலமாக திட்ட மேம்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து சேலம் மாநகரில் எங்கு எங்கு போக்குவரத்து நெரிசல் உள்ளது, எத்தனை பாலம் அமைப்பது, நடைபாதை, டெர்மினல் பஸ் ஸ்டாண்ட், மெட்ரோ ரயில் உள்ளிட்டவை எளிமையான போக்குவரத்துக்கு விரிவான திட்ட அறிக்கையை தனியார் நிறுவனம் தயாரித்தது.

மாநகர வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த எளிமையான போக்குவரத்து திட்ட முன்மொழிவு மிகவும் அவசியம். இதை கருத்தில் கொண்டு மாநகரின் எளிமையான போக்குவரத்திற்கு, ₹7 ஆயிரத்து 345 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த திட்ட அறிக்கையில், நடைபாதை, சைக்கிள் செல்லும் பாதை, கார் பாரக்கிங், ஆட்டோமெட்டிக் கார் பார்க்கிங், மெட்ரோ ரயில், மினி பஸ், டெர்மினல் பஸ் ஸ்டாண்ட், ரிங்ரோடு, மேம்பாலம், ரயில்வே மேம்பாலம் உள்ளிட்டவைகளை அமைக்கப்பட வேண்டும். இதில்,₹ 3,850 கோடியில் 35 கிலோ மீட்டருக்கு மாஸ் ராபிட்ஸ் டிரான்ஸ்போர்ட் மூலம் மெட்ரோ ரயில், ஒருவழியாக செல்லும் வாகன மேம்பாலமும், ₹225 கோடியில் 300 எலக்ட்ரிக்கல் பஸ், ₹105 கோடியில் மினி பஸ் உள்ளிட்டவைகளை ஏற்படுத்தும் வகையில் திட்ட அறிக்கை தயாராகியுள்ளது. இந்த திட்ட அறிக்கையை ஒன்றிய மற்றும் மாநில அரசிற்கு சமர்பித்து நிதி பெறும் வகையில் மாமன்ற கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாநகரில் எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த எளிமையான போக்குவரத்து திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதற்காக தனியார் நிறுவனத்தின் மூலம், சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளை கண்டறிந்தும், போக்குவரத்தை எளிமையாக்கும் வகையிலும் ₹7,345 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், மெட்ரோ ரயில், ெடர்மினல் பஸ் ஸ்டாண்ட், நடை பாதை, ரயில்வே பாலம், ரிங்ரோடு, ரயில்வே மேம்பாலம் உள்ளிட்டவைகள் கொண்டு வரும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஒன்றிய, மாநில அரசுக்கு அனுப்பி நிதியுதவி பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,’’ என்றனர்.

The post ரிங் ரோடு, மெட்ரோ ரயில், டெர்மினல் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்டவைகளுடன் ₹7,345 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் appeared first on Dinakaran.

Tags : Ring Road ,Metro ,Rail ,Salem ,Metro Rail ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல்...