×

ஏர்டெல் டவரை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

செய்யூர், ஏப்.28: சூனாம்பேடு அருகே அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ஏர்டெல் டவரை அகற்றக்கோரி, அரசு அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அடுத்த வன்னியநல்லூர் கிராமத்தில் அம்பேத்கர் தெரு உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில், ஏர்டெல் செல்போன் டவர் அமைக்க அந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கினர். அத்தோடு, கடந்த சில நாட்களுக்கு முன் டவர் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

ஆனால், செல்போன் டவர் அமைப்பதற்காக ஊராட்சியில் எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை எனவும், டவரை சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகளிடமும் ராமலிங்கம் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால், டவர் அமைக்கும் பணி துவங்கிய நாளிலிருந்து இப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இப்பகுதியில் விதிகள் மீறி செல்போன் டவர் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் செய்யூர் வட்டாட்சியர் மற்றும் மதுராந்தகம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், டவர் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்ததோடு, தற்போது செயல்படவும் துவங்கியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் சூனாம்பேடு – தொழுப்பேடு செல்லும் நெடுஞ்சாலையில் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சூனாம்பேடு போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது மாவட்ட கலெக்டரிடம் புகார் அளியுங்கள் என போலீசார் தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்கு கலெக்டரிடம் புகார் மனு அளிக்கிறோம். நடவடிக்கை இல்லாத பட்சத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்தனர். அதன்பின்னர், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சாலை மறியலால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post ஏர்டெல் டவரை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Citizens ,Airtel ,Seyyur ,Soonampedu ,Dinakaran ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...