×

மதுஷ்கா 205, குசால் 245, மேத்யூஸ் 100* இலங்கை 3 விக்கெட்டுக்கு 704 ரன் குவித்து டிக்ளேர்: அயர்லாந்துக்கு நெருக்கடி

காலே: அயர்லாந்து அணியுடனான 2வது டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 704 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. மதுஷகா, குசால் இரட்டை சதம் விளாச, ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழக்காமல் சதம் அடித்தார். காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து முதல் இன்னிங்சில் 492 ரன் குவித்து ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை 3ம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 357 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கருணரத்னே 115 ரன் விளாசி ஆட்டமிழந்தார்.
மதுஷ்கா 149 ரன், குசால் மெண்டிஸ் 83 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் இரட்டை சதம் விளாசி அசத்தினர்.

இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 268 ரன் சேர்த்தது. மதுஷ்கா 205 ரன் (339 பந்து, 22 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெக்பிரைன் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து குசால் மெண்டிசுடன் ஏஞ்சலோ மேத்யூஸ் இணைந்தார். இருவரும் 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக 133 ரன் சேர்த்தனர். குசால் 245 ரன் (291 பந்து, 18 பவுண்டரி, 11 சிக்சர்) விளாசி ஹியூம் பந்துவீச்சில் ஹம்ப்ரீஸ் வசம் பிடிபட்டார். தினேஷ் சண்டிமால் 13 ரன் எடுத்து காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 704 ரன் (151 ஓவர்) என்ற இமாலய ஸ்கோருடன் முதல் இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.

மேத்யூஸ் 100 ரன் (114 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), தனஞ்ஜெயா 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 212 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து, 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன் எடுத்துள்ளது. ஜேம்ஸ் 10, மூர் 19 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். கேப்டன் பால்பிர்னி 18 ரன், ஹாரி டெக்டர் 7 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 158 ரன் தேவை என்ற நிலையில் அயர்லாந்து அணி இன்று கடைசி நாள் சவாலை சந்திக்கிறது.

The post மதுஷ்கா 205, குசால் 245, மேத்யூஸ் 100* இலங்கை 3 விக்கெட்டுக்கு 704 ரன் குவித்து டிக்ளேர்: அயர்லாந்துக்கு நெருக்கடி appeared first on Dinakaran.

Tags : Madushka 205 ,Gusal 245 ,Mathews ,Sri Lanka ,Crisis ,Ireland ,Galle ,Dinakaran ,
× RELATED கட்டுமான பணியின்போது மண் சரிந்து தொழிலாளி பலி