×

வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை விழாவில் 63 நாயன்மார்கள் வீதியுலா கோலாகலம்: பக்தர்கள் சாமி தரிசனம்

 

திருக்கழுக்குன்றம், ஏப்.28: திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில், 63 நாயன்மார்கள் வீதியுலா கோலாகலமாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து சென்றனர். திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உலகப் பிரசித்திப்பெற்ற சிவதலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 11 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து, திருவிழாவின் 3ம் நாளான நேற்று காலை 63 நாயன்மார்கள் உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்மந்தர் உட்பட 63 நாயன்மார்கள் அமர்த்தப்பட்டனர்.

பின்னர், தாழக் கோயில் வளாகத்திலிருந்து வடக்கு கோபுர வாசல் வழியாக வரிசையாக வந்த 63 நாயன்மார்கள் கம்மாளர் வீதி, அக்ரகார வீதி, வழியாக மலையடிவாரம் வந்து கிரிவலப் பாதை மலையை சுற்றி மலை வலம் வந்தனர். அப்போது, வழி நெடுகிலும் பக்தர்கள் 63 நாயன்மார்களுக்கு தேங்காய் உடைத்தும், கற்பூரஆரத்தி காட்டியும் வழிபட்டனர். திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ், சுமார் 10 ஆயிரம் பேருக்கு காலை சிற்றுண்டியும், மதிய உணவும் வழங்கினார். இந்த 63 நாயன்மார்கள் உற்சவத்தை காண திருக்கழுக்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, 7ம் நாள் பெரியத்தேர் திருவிழா (பஞ்ஜரதம்) மே 1ம் தேதி நடைபெற உள்ளது.

The post வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை விழாவில் 63 நாயன்மார்கள் வீதியுலா கோலாகலம்: பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : 63 Nayanmars Veethiula ,Kolagalam ,Vedakriswarar Temple Chitrai Festival ,Sami ,Thirukkalukkunram ,Nayanmars ,Vedakriswarar hill temple ,63 Nayanmars Veethiula Kolakalam ,
× RELATED கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம் கோயில்களில்...