புதுடெல்லி: சசிகலா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக அதிமுகவின் அமைப்புச் செயலாளர் செம்மலை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா அக்கட்சியின் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்ததோடு, அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி விட்டு, கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக்கூறி அதனை நிராகரித்தது. இதையடுத்து அந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து மேற்கண்ட விவகாரத்தில் சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கை நிராகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 23ம் தேதி உத்தரவிட்டது.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராகவும், அதேப்போன்று சசிகலா தொடர்ந்த வழக்குக்கு எதிராகவும் அதிமுகவின் அமைப்பு செயலாளராக செம்மலை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதேப்போன்று இந்த விவகாரத்தில் சசிகலா தரப்பிலும் இரண்டாவது முறையாக கடந்த 23ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த இரு மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் சசிகலா வழக்குக்கு எதிராக செம்மலை மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.